லேபிள்கள்

26.12.15

7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த அவகாசம் வேண்டும்:தமிழகம் உள்பட 5 மாநிலங்கள் கோரிக்கை

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள், மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளன.



நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான ஏழாவது ஊதியக் குழு, தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் கடந்த மாதம் அளித்தது. அதில், அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்றும், அதை, வரும் 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு கால அவகாசம் வழங்குமாறு பிரதமர் அலுவலகம், அமைச்சரவை செயலகம், மத்திய கொள்கைக் குழு (நீதி ஆயோக்) ஆகியவற்றிடம் சில மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு, மேற்கு வங்கம், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ஒடிஸா ஆகியவை அந்த மாநிலங்களாகும். ஊதிய உயர்வு அளிப்பதால் ஏற்படும் நிதிச் சுமையை சமாளிக்கும் வகையில், அந்தக் கால அவகாசத்தைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தங்களை தயார்படுத்திக் கொள்ளும்.

இதுகுறித்து நீதிபதி ஏ.கே.மாத்தூர் கூறியதாவது:

வழக்கமாக ஊதிய உயர்வு தொடர்பாக மத்திய அரசு அளிக்கும் பரிந்துரைகளை மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ளும். ஆனால், இதை அமல்படுத்துவது மாநில அரசுகளின் நிதி நிலைமையைப் பொருத்து மாறுபடும். ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளைக் கூட சில மாநிலங்கள் இன்னமும் அமல்படுத்தவில்லை என்றார் அவர்.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் தற்போது ஊதிய உயர்வை அறிவிக்க வேண்டியுள்ள நிலையில், வெவ்வேறு கால இடைவெளிகளில் ஊதிய உயர்வை அறிவிக்கும் ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள், ஊதியக் குழு பரிந்துரைகளால் பாதிக்கப்படாது.

இதுகுறித்து ஆந்திரப் பிரதேச அரசின் தலைமைச் செயலர் பி.வி.ரமேஷ் கூறுகையில், ""ஆந்திரத்தில் கடந்த ஏப்ரல் மாதம்தான் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது; அடுத்த ஊதிய உயர்வு, வரும் 2019-ஆம் ஆண்டுதான் வழங்கப்படும். எனவே, ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் எங்களைப் பாதிக்காது'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக