லேபிள்கள்

7.1.16

தமிழகத்தில் மீண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு: ஜனவரி 18ல் துவக்கம்

மக்கள் தொகை விபரத்தை உறுதிப்படுத்த, தமிழகத்தில் ஜன.,18 முதல் பிப்.,5க்குள் 2வது முறையாக ஆசிரியர்கள் வீடுகள் தோறும் கணக்கெடுப்பு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2011ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.இதில் ஈடுபட்ட ஆசிரியர்கள் வீடுகள் தோறும் சென்று வீட்டில் உள்ள தலைவர், தலைவி பெயர், குழந்தைகள், அசையும், அசையா சொத்துக்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் போன்ற 42 விதமான விபரங்களை சேகரித்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு விண்ணப்பத்தில் பூர்த்தி செய்தனர்.

இந்நிலையில், மீண்டும் தமிழகத்தில் மக்கள் தொகை விபரங்களை உறுதிப்படுத்தும் விதமாக, 2ம் கட்டமாக ஆசிரியர்களை கொண்டு வீடுகள் தோறும் கணக்கெடுப்பு நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2011ல் மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சி, கிராம ஊராட்சி பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்திய அதே ஆசிரியர்களே இப்பணிகளில் ஈடுபட வேண்டும். இப்பணியை ஜனவரி 18ல் துவக்கி பிப்ரவரி 5க்குள் முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணக்கெடுப்பு எப்படி: 2011ல் எடுத்த கணக்கெடுப்பு விபரத்துடன் கூடிய விண்ணப்பம் ஆசிரியர்களுக்கு 'பிரிண்ட் அவுட்' செய்து வழங்கப்படும். அந்த விண்ணப்பத்தையே வீடுகள் தோறும் எடுத்துச் சென்று, வீட்டில் உள்ள குடும்ப தலைவர், தலைவி பெயர் சரியாக உள்ளதா, குழந்தைகள் மற்றும் இதர விபரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்க்க வேண்டும். இதில் கூடுதலாக ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, அலைபேசி எண்களை கண்டிப்பாக கேட்டு பெற வேண்டும். 2011க்கு பின் பிறந்த குழந்தை இருந்தால், அவர்களது விபரம், மாறுதலாகி சென்ற குடும்பத்தினர், புதியதாக திருமணம் முடித்தோர் விபரங்களை கூடுதலாக சேகரிக்குமாறு, ஆசிரியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு உதவி இயக்குனர் ஒருவர் கூறுகையில், “வீடுகள் தோறும் வரும் ஆசிரியர்களுக்கு குடும்ப தலைவர்கள் முழு விபரம் வழங்கி, ஒத்துழைப்பு தர வேண்டும். ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, அலைபேசி எண்களை ஆசிரியர்களிடம் கண்டிப்பாக வழங்க வேண்டும். ஆதார் அட்டை இல்லாதோர் மக்கள்தொகை பதிவேடு (இ.ஐ.டி.,எண்) எண்ணை காண்பிக்கலாம். இக்கணக்கெடுப்பு படி தான், ரேஷன் கார்டுக்கு 'ஸ்மார்ட் கார்டு' தயாரிக்கும் திட்டம் உள்ளது. எனவே மக்கள் உண்மையான தகவலை தரவேண்டும்,” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக