லேபிள்கள்

13.3.16

மாயமாகும் ஆசிரியர்களின் தபால் ஓட்டுகள்

தமிழகம் முழுவதும், ஆசிரியர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை தருமாறு, கல்வி அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர். இதனால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சட்டசபை தேர்தலையொட்டி, ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். தேர்தல் பணிக்கு விருப்பமுள்ளவர்களின் பட்டியலை தயார் செய்ய, மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டன.


ஆனால், கல்வித்துறை அதிகாரிகள் அனைத்து ஆசிரியர்களுக்கும் விண்ணப்பம் வழங்கி, அதில் தேர்தல் பணியாற்ற விருப்பமுள்ளதாக கட்டாயமாக எழுதி வாங்குகின்றனர்.



அந்த விண்ணப்பத்துடன் அனைத்து ஆசிரியர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண், வாக்காளர் பட்டியல் விவரங்களையும் சேகரிக்கின்றனர்.அதனால் பள்ளி ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். உடல் நலன் குறைவான ஆசிரியைகள், மகப்பேறு காலத்திலுள்ள ஆசிரியைகள், நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோய் பாதிப்புள்ள ஆசிரியர்கள் போன்றோருக்கு, தேர்தல் பணிகளில் விலக்கு உண்டு.



ஆனால், அவர்களிடம் வாக்காளர் விவரங்களை, தொகுதி வாரியாக, பாகம் எண்ணுடன் பெறுவதால், ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.லோக்சபா தேர்தலில் நடந்தது போல், இந்த முறையும் தங்களின் தபால் ஓட்டு மாயமாகி விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். இந்த பிரச்னை குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம், ஆசிரியர் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.



வேதனையாக உள்ளது!ஆசிரியர்களின் வாக்காளர் விவரங்களை பெற்று,
தேர்தல் பணிக்கு செல்லும் முன், முகாம் அலுவலகத்திலேயே மின்னணு ஓட்டு இயந்திரங்கள் வைத்து, ஆசிரியர்களின் ஓட்டுக்களை பதிய செய்ய வேண்டும். இல்லையென்றால் எங்களின் தபால் ஓட்டுக்கள் பறிபோய் விடும். தேர்தல் பணியில் இருக்கும் எங்களுக்கே ஓட்டுரிமை மறைமுகமாக பறிக்கப்படுகிறது என்பது வேதனையாக உள்ளது



தேர்தல் பணியில் ஈடுபடும்அனைவருக்கும் தபால் ஓட்டு!தேர்தல் பணியில் ஈடுபடும், அரசு ஊழியர்கள் அல்லாதவர்களுக்கும் தபால் ஓட்டு வழங்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:



இதுவரை நடந்த தேர்தல்களில், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார் ஆகியோருக்கு மட்டும், தபால் ஓட்டு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், வரும் தேர்தலில், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும், அரசு வாகன டிரைவர்கள், தனியார் வாகன டிரைவர்கள், கிளீனர்கள் ஆகியோருக்கும் தபால் ஓட்டு வழங்கப்படும். அதேபோல, ஓட்டுச் சாவடிகளில், 'வெப் கேமரா, வீடியோ' பதிவு போன்றவை மேற்கொள்ளப்பட உள்ளன.



இப்பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கும், தபால் ஓட்டு வழங்கப்படும். தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார், தனியார் என, அனைவரிடமும் வாக்காளர் அடையாள அட்டை எண் சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.



மே 2ம் தேதி, தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் துவங்குகிறது. பயிற்சி வகுப்பு நிறைவு நாளில், அனைவருக்கும் தபால் ஓட்டு வழங்கப்படும்.


இவ்வாறு அவர் தெரிவித்தார்.



லோக்சபா தேர்தலில் ஓட்டுரிமை பறிபோனது!

கடந்த லோக்சபா தேர்தலில், தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் யாரும் தபால் ஓட்டு போடவில்லை. ஆனால், அனைவரின் ஓட்டுகளும் பதிவானதாக குறிப்பிட்டிருந்தனர். இது எப்படி என்று, தற்போது வரை மர்மமாகவே உள்ளது.



வழக்கமாக, தேர்தலுக்கு 15 நாட்களுக்கு முன், வாக்காளர் பட்டியல் விவரம் வாங்குவர். தேர்தலுக்கு, ஐந்து நாட்களுக்கு முன் தபால் ஓட்டு விண்ணப்பம் கொடுப்பர். தேர்தல் பணிக்கு செல்லும் முன், தேர்தல் அலுவலர் முகாம்களில் வைக்கப்பட்ட பெட்டியில், தபால் ஓட்டாக, விண்ணப்பங்களை பதிவு செய்து விட்டு செல்வோம்.



ஆனால், லோக்சபா தேர்தலில் விண்ணப்பமே வழங்காமல், எங்கள் ஓட்டுரிமை பறிபோனது. இந்த முறை அனைத்து ஆசிரியர்களின் வாக்காளர் விவரங்களை முன் கூட்டியே பெறுவது, எங்களின் ஓட்டுகளை மறைமுகமாக பதிவு செய்வதற்காவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.



மேலும், பல ஆசிரியர்கள் முகவரி மாற்றம், பெயர் திருத்தம் தொடர்பாக விண்ணப்பித்துள்ள நிலையில், தற்போதே வாக்காளர் விவரங்களை பெறுவது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக