அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தகுதி தேரர்வு கட்டாயம் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2011–ம் ஆண்டுக்கு பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் இந்த தேர்வில் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெறாத ஆசிரியர்களுக்கு சம்பளம் தர முடியாது என்று தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தார்.
இந்த தடையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் சத்தீஷ் குமார் அக்னிகோத்ரி, எம்.வேணு கோபால் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் சோமயாஜி ஆஜராகி, தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
ஆசிரியர்கள் சார்பில் ஜி.சங்கர் ஆஜராகி, ‘20–12– 2013–ம் ஆண்டுக்கு பிறகு தகுதி தேர்வு நடத்தப்படவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் சம்பளம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். எனவே தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்கக் கூடாது’ என்று வாதிட்டார்.
இதையடுத்து தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். பின்னர் அரசின் இந்த மேல்முறையீட்டு மனுவுக்கு ஆசிரியர்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும். விசாரணையை வருகிற ஏப்ரல் 6–ந்தேதிக்கு தள்ளி வைக்கிறோம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக