லேபிள்கள்

19.8.16

மருத்துவ நுழைவுத் தேர்வு தரவரிசைப் பட்டியலில் மாணவர்களை விட அதிக அளவில் இடம் பிடித்த மாணவிகள்: 3.21 லட்சம் பேர் தகுதி பெறவில்லை

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 15 சதவீதம் இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) மூலம் நிரப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

அதன்படி மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) கடந்த மே மாதம் 1-ம் தேதி முதல் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வையும், கடந்த ஜூலை 24-ம் தேதி இரண்டாம் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வையும் நடத்தியது. இந்த 2 கட்ட தேர்வு முடிவுகளையும் சிபிஎஸ்இ நேற்று முன்தினம் வெளியிட்டது.

மாணவிகள் சாதனை

இது தொடர்பாக சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:இரு கட்டங்களாக நடந்த தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு 8,02,594 பேர் விண்ணப்பித்திருந்தனர். 7,31,223 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 71,371 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வு எழுதியவர்களில் 1,83,424 மாணவர்கள், 2,26,049 மாணவிகள், 4 திருநங்கைகள் என மொத்தம் 4,09,477 பேர் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்து கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். 3,21,746 பேர் தகுதி பெறவில்லை.அடுத்த வாரம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீதம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு www.mcc.nic.in இணையதளம் மூலமாக ஆன்லைனில் கலந்தாய்வு தொடங்குகிறது. இந்த கலந்தாய்வுக்கு 11,058 மாணவர்கள், 8,266 மாணவிகள், 1 திருநங்கை என மொத்தம் 19,325 பேர் தகுதி பெற்றுள்ளனர். இரு கட்டங்களாக நடந்த தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் மாணவர்களை விட கூடுதலாக 4,265 மாணவிகள் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளனர். தேர்வின்போது விதிமுறைகளை மீறிய 26 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் மருத்துவ நுழைவுத் தேர்வு எழுத நிரந்தரமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

3.5 லட்சம் மாணவர்கள் பாதிப்பு

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு பற்றி சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் கூறும்போது, “இந்ததேர்வில் 4,09,477 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். ஆனால் நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சுமார் 52 ஆயிரம் எம்பிபிஎஸ் இடங்களில் 35 ஆயிரம் இடங்கள் மற்றும் 22 ஆயிரம் பிடிஎஸ் இடங்களில் 16 ஆயிரம் இடங்கள் மட்டுமே நுழைவுத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் மூலமாக நிரப்பப்பட உள்ளன. மீதமுள்ள 3.5 லட்சம் மாணவர்களால் மருத்துவப் படிப்பில் சேர முடியாது. மருத்துவ நுழைவுத் தேர்வால் தமிழக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக மாணவர்கள் பெரும்பாலானோர் நுழைவுத் தேர்வில் தகுதி பெறவில்லை” என்றார்.

விழிப்புணர்வு வேண்டும்:

மருத்துவ நுழைவுத் தேர்வு பற்றி சீமான் ஸ்கூல் ஆஃப் மெடிக்கல் என்ட்ரன்ஸ் நிறுவனர் சீமான் கூறும்போது, “மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கட்டாயம் வேண்டும். அதே நேரத்தில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறையை கொண்டுவர வேண்டும். தற்போது நடந்த நுழைவுத் தேர்வு சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் நடத்தப்பட்டது. தமிழக மாணவர்களால் நுழைவுத் தேர்வை எழுதமுடியவில்லை. நம்முடைய மாநில பாடத் திட்டத்தில் இருந்து3 மதிப்பெண்களுக்கு மட்டுமே கேள்விகள் இருந்தன. மற்ற அனைத்து கேள்விகளும் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டிருந்தன.ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பாடத் திட்டம் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை ஒட்டியே உள்ளன. அதனால் அந்த மாணவர்கள் எளிதாக நுழைவுத் தேர்வை எழுதினர். சிபிஎஸ்இ பாட திட்டத்தில் படித்த மாணவர்கள் மட்டுமே நுழைவுத் தேர்வில் தேர்வாகி உள்ளனர். தமிழகத்தில் நுழைவுத் தேர்வு குறித்து ஆசிரியர்களுக்குமுதலில் பயிற்சி அளிக்க வேண்டும். அதன்பின் நுழைவுத் தேர்வு குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் முறையாக பயிற்சி எடுக்க வேண்டும். அப்போதுதான் தேர்வில் வெற்றி பெற முடியும். மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி மையங்களையும் அதிகரிக்க வேண்டும். மருத்துவக் கல்லூரிகளையும் அதிகரிக்க வேண்டும்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக