பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை தனித் தேர்வராக எழுதிய மாணவிக்கு சட்டக் கல்லூரியில் பயில அனுமதி அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
திருச்சியைச் சேர்ந்த தாரணி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
திருச்சி ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2007-ஆம் ஆண்டு 9-ஆம் வகுப்பு முடித்தேன். பின்னர் மன அழுத்தம் காரணமாக 10-ஆம் வகுப்பை பள்ளியில் படிக்காமல் தனித் தேர்வராக எழுதித் தேர்ச்சி பெற்றேன். தொடர்ந்து பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளை, ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலேயே படித்தேன். 2013-இல் காட்சி தொடர்பியல்(விசுவல் கம்யூனிகேசன்) இளம் அறிவியல் பட்டம் பெற்றேன்.
இந்த நிலையில், சட்டம் (எல்எல்பி) பயில்வதற்காக, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்தேன். தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கட் ஆஃப் மதிப்பெண்களாக 71.318 நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நான் 71.961 மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். தேர்வுப்பட்டியலில் எனது பெயர் இல்லை.
இதுதொடர்பாக விசாரித்தபோது, பத்தாம் வகுப்பை தனித்தேர்வராக எழுதியதால் அனுமதி வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. பத்தாம் வகுப்புத் தேர்வை தனியாக எழுதி இருந்தாலும், அதைத் தொடர்ந்து பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பை முறையாக பயின்றதால் சட்டக் கல்லூரியில் சேர்க்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் நூட்டி ராம்மோகனராவ், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், திறந்தநிலைப் பல்கலைக்கழகம் மூலமாக பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பயின்றவர்களுக்கே அனுமதி மறுக்கப்படும் என சட்டக் கல்வி விதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுதாரர் 10-ஆம் வகுப்பை தனியாக எழுதியிருந்தாலும், பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பை முறையாகப் பயின்றதால் அவருக்கு சட்டக் கல்லூரியில் பயில அனுமதியளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக