லேபிள்கள்

15.8.16

புதிய கல்விக்கொள்கை இன்றைய தமிழ் இந்து கட்டுரை

ஒரு தேசத்தின் எதிர்காலம் அதன் கல்விச்சாலைகளிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு அரசு முன்வைக்கும் கல்விக் கொள்கையின் மீதே அந்த எதிர்காலம் கட்டமைக்கப்படுகிறது. மோடி அரசு கொண்டுவரவிருக்கும் புதிய
கல்விக் கொள்கையின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்திருக்கும் ‘தி இந்து’, இது தொடர்பிலான விவாதத்தை நம்முடைய பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் என அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் கொண்டுசெல்ல வேண்டியதன் பொறுப்பையும் உணர்ந்திருக்கிறது. இதன் நிமித்தம் இந்த வாரம் முழுவதும் நடுப்பக்கத்தில் இது தொடர்பிலான கல்வியாளர்களின் கட்டுரைகள், பேட்டிகள் வெளியாகவிருக்கின்றன.

 இன்று பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தொடங்கி நவீன இந்தியாவில் முன்வைக்கப்பட்ட கல்விக் கொள்கைகள், அவற்றின் நோக்கங்கள், தாக்கங்களின் வரலாற்றுப் பின்னணியில் புதிய கல்விக் கொள்கையின் சுருக்கமான அறிமுகம்.

புதிய கல்விக் கொள்கைக்கான வரையறை அறிக்கை எனும் பெயரில் மத்திய அரசு வெளியிட்டிருக்கும் 43 பக்கக் கொள்கைப் பிரகடனம், கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வுகளை உருவாக்கியிருக்கிறது. பலரும் சுட்டிக்காட்டும் சம்ஸ்கிருதத் திணிப்பு என்பதையும் தாண்டி, பல்வேறு அபாயங்களை மோடி அரசின் கல்விக் கொள்கை கொண்டிருக்கிறது. புதிய கல்விக் கொள்கையை அலசும் முன்னர், இதற்கு முன்பு உருவாக்கப்பட்ட முக்கியமான கல்விக் குழுக்களைப் பார்த்துவிடலாம்.

மெக்காலேவுக்கு முன்னும் பின்னும்

1813-ல் முதன்முறையாக இந்திய மக்களுக்குக் கல்வி அளிக்கும் பொறுப்பைத் தனது பணியாக ஏற்பதாக பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. கல்வி சாசனம் எனும் ஆவணத்தையும் வெளியிட்டது. அதற்காக அன்று உடனடியாக ரூ. 1 லட்சம் ஒதுக்கப்பட்டதும், அது கிறித்துவ மிஷனரிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டதும் வரலாறு. ஆங்கிலக் கல்வியே தனது கல்வி என இந்த ஆவணம் பகிரங்கமாக அறிவித்தது. கிழக்கிந்திய கம்பெனியில் வேலை பார்க்க, இந்திய மக்களுக்குச் சாதி, மதம் உள்ளிட்ட தகுதி தேவையில்லை. பிரிட்டிஷ் கல்வி நிறுவனக் கல்வித் தகுதியின் அடிப்படையில் மட்டுமே வேலை வழங்கப்படும் என அதன் இரண்டாம் ஷரத்து குறிப்பிடுகிறது.

1834-ல் மெக்காலே இந்தியா வந்தார். அவருடன் ஆலோசனை நடத்திய கவர்னர் ஜெனரல் பெண்டிங் பிரபு, இந்தியக் கல்விக்கு - பொதுக் கற்பித்தல் முறை எனப் பெயரிட்டு, அவரையே அதன் தலைவராக்கினார். எண்ணத்திலும் அறிவாற்றலிலும் கலாச்சாரத்திலும் ஆங்கிலேயராகவும் ஆனால், ரத்தத்திலும் நிறத்திலும் இந்தியராகவும் இருக்கும் ஒருவரை உருவாக்குவதே கல்வியின் நோக்கம் என அறிவித்த மெக்காலே, 267 பக்கம் கொண்ட கல்விக் கருத்துருவை அரசுக்குச் சமர்ப்பித்தார்.

ஆங்கிலக் கல்வியை முழுதும் வேலையாள் தகுதி பெறும் கல்வியாக மாற்றினார். பிராந்திய மொழிகளில் புத்தகங்கள் அச்சிடுவதைக்கூடத் தடை செய்தார். “வியாபார, நிர்வாக மொழியாய் ஆங்கிலம்; அதற்காக பிரிட்டிஷ் அரசுக்குத் தேவைப்படும் லட்சக்கணக்கான - கணக்காளர், எழுத்தர் வேலைக்கான கல்வி ஆகியவை போதுமானவை. பெரிய மேதாவிகள், தத்துவ அறிஞர்கள் எல்லாம் நமக்கு எதற்கு?” என அவர் பகிரங்கமாக அறிவித்தார். 1835-ல் வில்லியம் பெண்டிங் பிரபு, மெக்காலே குறிப்புகளை ஏற்று முழுமையாக அமல்படுத்த உத்தரவிட்டார். பிற்காலத்தில், ‘வேலை… கும்பேனி அரசு வேலை, தனியார் ஆலை வேலை எனும் ஈர்ப்பே கல்வியின் அடிநாதமாக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி தரும் சான்றிதழ், வேலை பெறும் ஒரு அடையாளச் சீட்டாகப் பயனாகிறது’ என்று காந்தி விமர்சித்தது குறிப்பிடத் தக்கது.

1853-ல் இங்கிலாந்தின் கல்விக் கட்டுப்பாட்டுக் குழுமத்தின் தலைவராக இருந்த சார்லஸ் வுட் தலைமையில் ஒரு கல்விக் குழு இந்தியா வந்தது. 1854-ல் கர்சன் பிரபுவின் காலத்தில் இதன் அறிக்கை முன்வைக்கப்பட்டது. நமது கல்வி முறையில் இருக்கும் காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு, முழு ஆண்டுத் தேர்வு என்பதெல்லாம் இக்குழுவின் கைங்கர்யம்தான். பள்ளிக்கான சீருடை, ஒரு பாடமாகப் பிராந்திய மொழி போன்றவற்றை 1882-ல் வில்லியம் ஹண்டர் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய கல்வி கமிஷன் கொண்டுவந்தது.

டாக்டர் ராதாகிருஷ்ணன் குழு

நாடு சுதந்திரம் அடைந்த அடுத்த ஆண்டே, பல்கலைக்கழகக் கல்வியின் தரத்தை ஆராய, அப்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பேராசிரியராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் சுதந்திர இந்தியாவின் முதல் கல்விக் குழுவை நியமித்தார் பிரதமர் நேரு. பிரதான பிரச்சினை பல்கலைக்கழகக் கல்வியல்ல; அனைவருக்குமான ஆரம்பக் கல்விதான் என அம்பேத்கர், மேகநாத் சாஹா, அபுல் கலாம் ஆசாத் போன்றவர்கள் அப்போதே கருத்துத் தெரிவித்தனர். ஆனால், இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவைத் தோற்றுவித்தது உட்பட, உயர் கல்வியை நிறுவனமயமாக்கி, தனியார் கல்லூரிகளை உள்ளூர்க் குழுமங்கள் உருவாக்கி, மானியக் குழுவிடம் பண உதவிபெறலாம் என்றெல்லாம் முன்மொழிந்தது டாக்டர் ராதாகிருஷ்ணன் கல்விக் குழு.

டாக்டர் லட்சுமணசாமி குழு

1952-ல் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த டாக்டர் லட்சுமணசாமி முதலியார் தலைமையில் ஒரு கல்விக் குழு அமைக்கப்பட்டது. இதில் தந்தை பெரியார், ஜி.டி.நாயுடு உட்பட பலர் நேரில் ஆஜராகி, கல்வி குறித்து விவாதித்தனர். பெண் கல்வி மேம்பட பெண்களுக்கான கல்வி நிலையங்களைத் தொடங்குதல், தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளைப் பயிற்று மொழியாக்குதல் என இரண்டு முக்கிய மாற்றங்களை இக்குழு முன் மொழிந்தது.

கோத்தாரி கல்விக் குழு

டாக்டர் டி.எஸ்.கோத்தாரி தலைமையில் நேரு உருவாக்கிய இந்தக் குழுவின் அமைப்பே வித்தியாசமாக இருந்தது. பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், கல்வியாளர்கள் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். 1964 அக்டோபர் 2-ல் தனது பணியைத் தொடங்கிய இக்குழு, 9,000 பேரிடம் கருத்தறிந்து, 2,400 பக்க அறிக்கையை 1966-ல் வழங்கியது. இந்தியக் கல்விக் குழுக்களிலேயே நமது மண்ணின் ஆதாரக் கல்வி எப்படி இருக்க வேண்டும் என்பதை மிகச் சரியாக முன்வைத்தது கோத்தாரி கல்விக் குழுதான்.

அரசு தனது ஒட்டுமொத்த உற்பத்தியில் 6%ஐக் கல்விக்கு ஒதுக்க வேண்டும் என அக்குழு பரிந்துரை செய்தது (தற்போது மோடி அரசு கல்விக்கு ஒதுக்கியிருப்பது 3.47% மட்டுமே). பொதுப் பள்ளிகளை அக்குழுதான் அறிமுகம் செய்தது. ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு ஆரம்பப் பள்ளி, 2 கிலோ மீட்டருக்கு ஒரு உயர்நிலைப் பள்ளி, 3 கிலோ மீட்டருக்கு ஒரு மேல்நிலைப் பள்ளி என கல்விச் சாலைகளைக் கட்டமைத்தது. தறிப் பயிற்சி, தோட்டக் கலை, குடிமைப் பயிற்சி ஆகியவற்றை அறிமுகம் செய்தது. விளையாட்டு, நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை இக்குழுவின் சாதனைகள். இக்கல்விக் குழுவின் பரிந்துரைகளை அரசுகள் முழுமையாக அமல்படுத்தவில்லை.

ராஜீவின் புதிய கல்விக் கொள்கை

1986-ல் புதிய கல்விக் கொள்கை எனும் பெயரில் கல்வியில் மாற்றங்களை அறிவித்தது ராஜீவ் அரசு. பெருநிறுவனங்கள் மற்றும் தொழில்துறைக்குப் பணியாளர்களை வழங்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது அது. தொழில் கல்வியே அதன் பிரதானம். முன்பு பிரிட்டிஷ்காரர்களுக்குக் கணக்காளர்களை உருவாக்கிய மெக்காலே கல்வி போலவே இந்தப் புதிய கொள்கை செயல்பட்டது. மதிப்பெண்களைத் துரத்தும் மனப்பாடக் கல்விக்கே முக்கியத்துவம் தரப்பட்டது. ஆங்கிலமே வேலைவாய்ப்பைத் தர முடியும் என்பதால், பட்டிதொட்டிகளில் எல்லாம் நர்சரிப் பள்ளிகள் முளைத்தன. பில்கேட்ஸின் பணியாட்களை உருவாக்க வடிவமைக்கப்பட்ட கல்விக் கொள்கை என்று கல்வியாளர்கள் இதை விமர்சிக்கிறார்கள்.

யஷ்பால் கல்விக் குழு

உலகம் முழுதும் கல்வி எனும் பெயரில் குழந்தைகள் வதைபடுவதைக் கடுமையாக விமர்சித்த யுனிசெஃப், யுனெஸ்கோ போன்ற ஐநா சபையின் குழந்தைகள் நல அமைப்புகள், கற்றலைச் சுமையற்றதாக்கவும் இனிமையாக் கவும் நடவடிக்கை எடுக்கக் கோரி நாடுகளை அழைத்தன.

சாதி, சமய, வர்க்க வேறுபாடுகள் இன்றி, ஒரே மாதிரிக் கல்வி எனும் நிர்ப்பந்தம் வந்தபோது 2009-ல் அமைக்கப்பட்டதுதான் பேராசிரியர் யஷ்பால் தலைமையிலான கல்விக் குழு. தேர்வுகளுக்குப் பதிலாக, மாற்றுக் கல்வித் தொடர் மற்றும் முழுமை மதிப்பீட்டை (சி.சி.இ.) இக்குழு அறிமுகம் செய்தது. எட்டாம் வகுப்பு வரை தொடர் தேர்ச்சி என்பதை இக்குழு கொண்டுவந்தது. இன்று பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேரும் 100 குழந்தைகளில் 76 பேரை எட்டாம் வகுப்பில் நம்மால் தக்கவைக்க முடிந்துள்ளது.

மோடி முன்வைக்கும் கல்விக் கொள்கை

இந்தச் சூழலில்தான் மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிடும் புதிய கல்விக் கொள்கை, பல்வேறு அச்சங்களை ஏற்படுத்தியிருக்கிறது. மெக்காலே - ராஜீவ் கல்விக் கொள்கைகளை நினைவுபடுத்தும் இக்கொள்கை, அடுத்த 20 ஆண்டுகளில் கல்வி என்னவாகும் எனும் பெருங்கவலையையும் ஏற்படுத்துகிறது. வேதகாலக் கல்வியே புனிதமானது என்றெல்லாம் சொல்வதைவிடவும், இதற்கு முன்பு யஷ்பால் குழு என்று ஒன்று இருந்ததையோ அது சுமையற்ற கற்றல் முதல், குழந்தைகள் உரிமைகளை, ஆசிரியர்களின் கடமையை உருவாக்கியதையோ கணக்கில் எடுக்கவில்லை என்பதுதான் பெரும் அதிர்ச்சி. எந்த ஒரு கல்விக் கொள்கையும் தனக்கு முன் நடந்தவற்றை, பட்டியலாகவாவது குறிப்பிட்டு அதன் தொடர்ச்சியாகத் தன்னை அறிவித்துக்கொள்ள வேண்டும் என்பதே மரபு.

இதன் முக்கிய அம்சங்கள்

1. பொருத்தமில்லாத பாடப் பொருள் மற்றும் ஊக்கமற்ற கற்பித்தல் முறை, நம் கல்வியில் முன்பிருந்த தரம் போய்விட்டது என்று சொல்லும் புதிய கல்விக் கொள்கை, இதைச் சரிசெய்ய இரண்டு வழிகளை முன்வைக்கிறது. முதலாவதாக, பழையபடி மத்தியப் பட்டியலுக்குக் கல்வி வரவேண்டும் என்கிறது. ஆனால், இது மாநிலங்களின் உரிமையைப் பறித்துவிடும் என்று குரல்கள் எழுந்திருக்கின்றன.

அடுத்து, நான்காம் வகுப்பின் முடிவிலிருந்தே தேர்ச்சி / தோல்வி என மாணவர்களைச் சலித்தெடுக்க வேண்டும் என்கிறது. இது பழையபடி பள்ளியிலிருந்து பல மாணவர்கள் வெளியேறுவதற்குத்தான் வழிவகுக்கும்.

2. திறன்களை, குறிப்பாக வேலைவாய்ப்புத் திறன்களை வளர்க்க நமது கல்வி தவறிவிட்டது; வேலைக்குத் தகுதியற்ற படித்தவர்களை உருவாக்கி வீணடித்துவிட்டது என்று சொல்லும் புதிய கொள்கை, இதைச் சரிசெய்ய திறன் மேம்பாட்டு ஆணையம் அமைத்து, பள்ளிக்கூடங்களில் தொழில்துறை தேவைகளை மனதில் வைத்து, மாணவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்க வேண்டும் என்கிறது. மேலும், கல்வி முழுமை பெறும் முன்னமே வேலைத் தகுதிச் சான்றிதழ் மூலம் (மாணவர்கள் விரும்பினால்) ஒன்பதாம் வகுப்போடு தொழில் துறையில் இணையலாம் என்கிறது. இது குலக் கல்விமுறையை நினைவுபடுத்துவதாகக் கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

3. இந்திய அளவிலான கல்வியின் தரத்தை மேம்படுத்த, கல்வி அமைப்புகள், பள்ளிகளுக்கான தரப்பட்டியல் தயாரிக்க கல்லூரி அளவிலான தரமேம்பாட்டுக் குழு போல ஒரு அமைப்பு ஏற்படுத்தப்படும். தேசிய அளவிலான பள்ளிக் கல்வி தரச்சான்று ஆணையம் என அது அழைக்கப்படும் என்கிறது இந்த அறிக்கை. இது அரசுப் பள்ளிகளை முற்றிலும் முடங்கச் செய்துவிடும் எனும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

4. ஆசிரியர்களின் தரம் - தலைமை ஆசிரியரின் தகுதி இவற்றில் எந்த சமரசத்தையும் மோடி அரசு ஏற்றுக்கொள்ளாது. இதற்காகவே திறன் சோதனைகளுக்கு அவர்கள் உட்படுத்தப்படுவார்கள் என்று சொல்லும் இந்த அறிக்கை, குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தரச்சான்றுத் தேர்வுகளை ஆசிரியர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்கிறது. ஏற்கெனவே ஆசிரியர் பயிற்சிப் பட்டப் படிப்புகளுக்கு சேர ஆள் இல்லை என்பது வேறு விஷயம்.

5. மதிய உணவுத் திட்டத்திலிருந்து ஆசிரியர்களை விடுவிக்கிறது இந்தப் புதிய கொள்கை. அதேசமயம், பள்ளிகளுக்கு அரசு நேரடியாக உணவு தராது. அதற்குப் பதிலாக அவற்றைத் தர்ம அமைப்புகளிடம் (தனியார்) ஒப்படைத்துவிடும். அரசின் நலத்திட்டத்தைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சி இது.

6. ‘இந்திய கலாச்சாரக் கூறுகளை இன்றைய கல்வி முற்றிலும் கைவிட்டு விட்டது. இதைச் சரிசெய்ய வகுப்பில் மூன்றாவது மொழியாக சம்ஸ்கிருதம் இணைக்கப்பட்டு, ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு சம்ஸ்கிருத ஆசிரியர் நியமிக்கப்படுவார்’ என்று இக்கொள்கை முன்வைக்கும் திட்டம் அப்பட்டமான காவி மயம் என்று விமர்சிக்கப்படுகிறது.

கோத்தாரிக் குழு இந்தியாவைச் சமூகம் என்று அழைத்தது. இந்த ஆவணமோ இந்தியப் பொருளாதாரம் என்றே அழைக்கிறது. கோத்தாரிக் குழு கல்வியை சேவை என்று அழைத்தது. மோடியின் புதிய கல்விக் கொள்கை ஆவணமோ கல்வியை முதலீடு என்கிறது. கூடவே ‘குருகுல’ மாதிரி என்பதை வருவாய் என்கிறது.

மெக்காலேவுக்குத் தேவைப்பட்டது பிரிட்டிஷ் காலக் கணக்காளர்கள்; ராஜீவ் காந்திக்குத் தேவைப்பட்டது பில்கேட்ஸின் வேலையாட்கள்; மோடியின் தேவை மேலும் மாறுபட்டது. அவ்வளவே. கடந்த பல பத்தாண்டுகளில் கடும் போராட்டங்கள், சோதனைகளுக்கிடையில் உரு வான ஏகலைவர்களின் கட்டை விரல்களைத் துண் டாடிய குருதியில்தான் இக்கல்விக் கொள்கை எழுதப் பட்டுள்ளது.

ஆயிஷா இரா.நடராஜன், கல்வியாளர்

தொடர்புக்கு: eranatarasan@yahoo.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக