லேபிள்கள்

19.8.16

நம் கல்வி... நம் உரிமை!- எப்படி இருக்க வேண்டும் கல்விக் கொள்கை?

இன்றைய இந்தியக் கல்வியின் முதல் தோல்வி, முதல் துயரம் எது? உலகில் எங்கும் இல்லா அளவுக்குக் கொடும் ஏற்றத்தாழ்வுகள் கொண்ட கல்வி அமைப்பு;
வெவ்வேறு பொருளாதார மட்டத்துக் குழந்தைகளுக்கும் வெவ்வேறு தரமுடைய பலமட்டப் பள்ளிகள். உச்சி குறுகி, அடி பரந்த இந்த சமுதாயப் பிரமிடின் உச்சியில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வசதி படைத்தோர் இன்றைய உலகின் வாய்ப்புகளை அள்ளிச் செல்லும் திறமை பெறுகின்றனர். பெரும்பான்மையோர் தகுதியற்றவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு, வடிகட்டப்பட்டு, வெளியே தள்ளப்படுகின்றனர். இவ்வாறு இழப்புக்கும் தவிப்புக்கும் உள்ளாகுபவர் பெரும்பாலும் நமது சாதிய சமுதாயத்தின் அடித் தட்டினரான தலித்துகள், பழங்குடியினரே.
இந்தியக் கல்வியின் இந்த வர்க்க-சாதியத் தன்மைக்குக் காரணம், கல்வி தங்குதடையில்லா தனியார்மயமாதலும், வணிகமயமாதலும், அரசு அனைவருக்கும் சம தரமுடைய கல்வி அளிக்கும் தன் அடிப்படைப் பொறுப்பை உதறித் தள்ளியதும்தான்.

பொதுப் பள்ளி முறைதான் அஸ்திவாரம்
உலகின் வளர்ச்சி அடைந்த அனைத்து நாடுகளும், இன்று வேகமாக வளரும் பல நாடுகளும் நிறுவியிருக்கும் கல்வி அமைப்பு ஒரே வகைப்பட்டதுதான். அருகமைப் பள்ளிகளைக் கொண்ட பொதுப் பள்ளி முறையில், அரசின் முழு நிதிப் பொறுப்பில், அனைத்துக் குழந்தைகளும், பெரும் பணக்காரரும், அடித்தட்டு ஏழைகளும் ஒரே பள்ளிகளில், அனைவரும் இலவசமாக, தாய்மொழி வழியே கற்கும் பள்ளிகள் மட்டுமே இந்த நாடுகள் அனைத்திலும் உள்ளன. இந்நாடுகளின் பெரும் வளர்ச்சியின் அஸ்திவாரமே இத்தகைய பொதுப்பள்ளி முறைதான். அமெரிக்காவோ, ஐரோப்பிய நாடுகளோ, குறிப்பாக பின்லாந்து, நார்வே, ஸ்வீடன் என்ற கல்வியில் ஒளிரும் ஸ்காண்டினேவிய நாடுகளோ, கிழக்கு ஆசிய நாடுகளோ… இவை அனைத்திலும் ஊன்றிச் செழித்திருப்பது இவ்வமைப்புதான்.
இத்தனை முன்னணி நாடுகளும் பொதுப் பள்ளி அமைப்பில் வைத்திருக்கும் அசைக்க முடியா நம்பிக்கையின் ஆதாரக் குறிக்கோள் என்ன? ஒரு நாடு தன் முழு மனித வள வளர்ச்சியைப் பெற வேண்டுமென்றால், அனைத்துக் குழந்தைகளுக்கும் சம வளர்ச்சி வாய்ப்பு அளிக்க வேண்டும். அப்போதுதான் அறிவு சுரந்து வரும், என்றைக்கும் பொய்யா பொங்கு மா கடலாக மாறும். அது அரசின் முதலீட்டில்தான் நடக்க இயலும்; இலவசமாக அளித்தால்தான் அனைத்துக் குழந்தைகளின் திறன் அக்கடலில் சேரும். இந்த நாடுகள் எல்லாம் சமத்துவ சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்ட சோஷலிச நாடுகள் அல்ல. அனைத்தும் முதலாளித்துவ நாடுகள். ஆனால், மக்கள் நல அரசுகள் (welfare states). இந்தியா மட்டும் இந்த வரலாற்றுப் பாதைக்கு விதிவிலக்காக முடியாது. மேற்சொன்ன இரு அடிப்படைகளின் மேல் இந்த மாற்றுக் கொள்கை எழுப்பப்படுகிறது.
முழுக்க முழுக்க இலவசக் கல்வி
1. அரசு அனைத்துக் குழந்தைகளுக்கும் 18 வயது வரை, சிறந்த சம தரமுடைய கல்வியை உறுதி செய்ய வேண்டும். இக்கல்வி அமைப்பு மேற்சொன்ன மற்ற நாடுகள் போன்று, அருகமைப் பள்ளிகளைக் கொண்ட பொதுப் பள்ளிகளாக இருக்க வேண்டும். தரமான முன் பருவக் கல்வி அனைத்துக் குழந்தைகளுக்கும் 3 வயதிலிருந்து அளிக்க வேண்டும்.
18 வயது வரை எந்தக் குழந்தையும், குடும்பத் தொழில் உட்பட்ட, எத்தகைய தொழிலிலும் ஈடுபடக் கூடாது. கல்வி தனியார்மயமாதலையும், வணிகமயமாதலையும் அனுமதிக்க இயலாது. கல்வி முழுதும் இலவசமாக அளிக்கப்பட வேண்டும். கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளுக்கு அனுமதி இல்லை.
அனைத்துப் பொருளாதார, சமூக மட்டக் குழந்தைகளும், எத்தகைய பாகுபாடுமின்றி ஒரே பள்ளிகளில் கற்க வேண்டும். ஒரு அருகமைப் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் அனைவரும் ஒரே பள்ளியில் படித்தல். தனியார் பள்ளிகள் கட்டணம் இன்றி, சேவை நிறுவனங்களாக இயங்கினால் அனுமதிக்கப்படலாம்.
தாய்மொழியே கல்வி மொழி
2. கல்விக்கான முழு நிதியும் அரசே செலவழிக்க வேண்டும். வளரும் தேவைகளுக்கும், ஒரு குழந்தையும் விடப்படாமல், அனைத்துக் குழந்தைகளும் சமமான கல்வி பெறுவதற்கு வேண்டிய நிதி ஒதுக்கப்பட வேண்டும். தேச வருமானத்தில் குறைந்த பட்சம் 6% என்று 1960-களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு இன்றுவரை 3.75%-க்கு மிகவில்லை. அமர்த்திய சென் சொல்கிறார், “ கல்விக்கும் சுகாதாரத்துக்கும், இந்திய அரசிடம் பணமில்லை என்று சொல்வது அப்பட்டமான முழுப் பொய்.”
3. தாய் மொழி / பிராந்திய மொழி ஒன்றே கல்வி மொழியாக ( medium) இருக்க வேண்டும்.
ஆங்கிலம் கல்வி மொழியாக அனுமதித்தல் கூடாது. ஆங்கில வழிக் கல்வி நம் வகுப்பறைகளைப் புரியாமை இருளில் மூழ்கடித்து, கல்வியை வெறும் மனனமாக்கி விட்டது. ஆனால், அதன் சர்வதேச முக்கியத்துவத்தை மனதில் கொண்டு, ஆங்கிலம் இரண்டாவது / மூன்றாவது மொழியாகச் சிறப்பாகக் கற்பித்தல். அதற்கு மற்ற ஆங்கிலம் பேசாத நாடுகளில் நிலவுவதைப் போன்று, ஒரு மொழியை இரண்டாவது மொழியாகக் கற்பிக்கும் தனிப்பட்ட கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்த வேண்டும்.
எந்த ஒரு மொழியையும் நாடு முழுதும் உள்ள அனைத்துக் குழந்தைகளும் கற்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் கூடாது.
ஒரு பிராந்தியக் குழந்தைகள் மற்றொரு பிராந்திய மொழியை, விருப்பத்துக்குகந்து கற்கும் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, வட மாநிலத்தவர், ஒரு தென்னிந்திய / வட கிழக்கு மொழியைக் கற்கலாம்.
கல்வியின் இலக்குகள்
4. கல்வித் திட்டம், பாடத்திட்டம், உள்ளடக்கம், கற்பித்தல் முறைகள் அனைத்தும் நம் அரசியல் சாசன விழுமியங்களை ஒட்டியே, சிறந்த தரமுடையதாக அமைக்கப்பட வேண்டும்.
மாபெரும் கல்வியாளர்கள், சமுதாயச் சிற்பிகள் ஆகியோரின் சிந்தனைகளில் மலர்ந்த லட்சியங்கள் கல்விக் கொள்கையின் ஆன்மாவாக விளங்க வேண்டும். பொருளாதார உற்பத்திக்கான திறன்களை வளர்ப்பதாக மட்டுமே கல்வி இருத்தல் கூடாது.
கல்வி மனித ஆற்றலைப் போற்றி வளர்க்கும் சமுதாய சாதனம். கல்வியின் நோக்கம் மனித நேயத்துடன் கூடிய ஜனநாயக, சமத்துவ, சமயம் சாராத சமூகத்தைக் கட்டி எழுப்புவதாகும். தனி மனிதரிடையே புதைந்திருக்கும் முழு ஆளுமையை வளர்த்தெடுப்பதும், அதை மொத்த சமுதாயத்தின் நலனுக்குப் பயன்பெற வைப்பதும் கல்வியின் இலக்குகளாகும். கல்வி சிலரின், லாபம், ஆதிக்கம், அதிகாரக் குவியல் ஆகியவற்றுக்கான சாதனமாக இருத்தல் கூடாது. கல்வி மாணவரிடம் சமூகப் பிரச்சினைகள் குறித்த உணர்வும், புரிதலும், அவற்றைத் தீர்ப்பதற்கான ஈடுபாடும் வளர்க்க வேண்டும். அத்துடன், ஆயிரம் பாகுபாடுகளும் ஒடுக்குமுறைகளும் கொண்ட நம் நாட்டில், பொருளாதார, சமூக அநீதிகளுக்கு உட்பட்டோரை மேலெழச் செய்யும் வலிமை மிக்க ஆயுதமாகக் கல்வி விளங்க வேண்டும்.
இத்தகைய கல்வித் திட்டத்தை உருவாக்குவதற்குப் பெரும் பாராட்டுகளைப் பெற்ற தேசிய கல்வித் திட்டம், 2005-ஐப் (National Curriculum Framework, 2005) பயன்படுத்தலாம்.
கல்வியில் ஆசிரியரின் பங்கு
வகுப்பறைக் கல்விக்கு அப்பால், மாணவரின் பல திறமைகள், படைப்பாற்றல் ஆகியவற்றை வளர்க்க, விளையாட்டு, சங்கீதம், ஓவியம் முதற்கொண்ட கலைகள் கற்றுத் தருதல். பல வளர்ந்த நாடுகளில் இத்தகைய திறமைகளும், பல தொழிற் திறமைகளும் அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாயப் பாடங்களாக மேல் நிலைக் கல்வி வரை கற்றுத் தரப்படுகிறது.
நவீன தகவல்-தொழில்நுட்ப உபகரணங்கள் அனைத்துப் பள்ளிகளிலும் சிறப்பாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.
ஆசிரியர் பயிற்சிக்குப் பெரும் முக்கியத்துவம் அளித்து, அதைப் பல ஆண்டுகள் நீடித்து, பணிக்காலம் முழுதும் தொடர்ந்து ஆசிரியர் தங்கள் அறிவையும், திறமைகளையும் வளர்க்கும் வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும். ஆசிரியர் பள்ளியின் அருகமை சமுதாயத்துடன் ஒன்றுகிற பண்புடையோராக விளங்க வேண்டும். கல்வித் திட்டம், பாடத்திட்டம், கற்பித்தல் முறைகளை உருவாக்குவதில் ஆசிரியருக்கு முக்கியப் பங்கு அளிக்க வேண்டும்.
அச்சுறுத்தும் தேர்வுகள் வேண்டாம்
5. அநேகமாக அனைத்து நாடுகளிலும், குறிப்பாக முன் குறிப்பிட்ட வளர்ந்த நாடுகள் அனைத்திலும் தேர்வுகளும், மாணவரை எந்த வகுப்பிலும் ஃபெயிலாக்குவதும் என்றோ கைவிடப்பட்டு விட்டன. அதே போன்று இங்கும் மாணவரை வருத்தி, அச்சுறுத்தும் தேர்வுகள் கைவிடப்பட வேண்டும். அந்நாடுகள் போல் ஆசிரியர் ஒவ்வொரு குழந்தையின் ஒவ்வொரு திறனையும் தொடர்ந்து நாள்தோறும் மதிப்பிடுதல்; பின் தங்கிய மாணவருக்குத் தனிக் கவனம் செலுத்தி திறன் பெறச் செய்தல் போன்ற முறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
மாணவர் போட்டி போடும் முறையைத் தவிர்த்து, குழுவாகக் கற்றல் போன்ற, ஒன்றுபடுதல், ஒத்துழைத்தல், மற்றவருடன் அனுசரித்தல், அவரைப் பாராட்டுதல் போன்ற பண்புகள் வளரும் முறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
நாடு முழுமைக்கும் ஒரே வகையான தேர்வு முறைகள் எந்த நாட்டிலும் இல்லை; இங்கும் கூடாது.
மாநிலப் பட்டியலில் கல்வி
6. கல்வி நிர்வாகத்தில் பெரும் மாற்றங்கள் தேவை. அதிகாரம் மையப்பட்டுக் கிடக்கும் நிலை மாறி, அதிகாரப் பரவலும், அதிகாரிகளின் கைகளிலிருந்து கல்வி மீட்கப்படுதலும் (de-bureaucratisation) தேவை.
கல்வி பொதுப் பட்டியலிலிருந்து, 1975-க்கு முன் இருந்தது போன்று, மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும். நாட்டின் கூட்டாட்சி முறையையும், சமூக - கலாச்சார - மொழிப் பன்முகச் செழுமையையும் காப்பாற்ற இது அத்தியாவசியம். மிகச் சிறிய நாடுகள் அன்றி, வேறு எந்த நாட்டிலும் கல்வி நாடு முழுவதற்கும் ஒன்றாக இல்லை. உயர் கல்வி உட்பட அனைத்துக்கட்டக் கல்வியிலும் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்.மாநில மையத்திலும் அதிகாரக் குவிப்பு கூடாது.
தமிழ்நாட்டில் 1970-களுக்கு முன் இருந்ததைப்போன்று, தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கல்வி நிர்வாகம் மாற்றப்பட வேண்டும். பள்ளிகள் பஞ்சாயத்துகள், நகராட்சிகளால் நிர்வகிக்கப்படுதல். அன்றாடக் கண்காணித்தல் பெற்றோர் குழுக்கள் கையில் ஒப்படைக்கப்படுதல்; அக்குழுக்களில் பெண்களுக்கும், எஸ்.சி / எஸ்.டி.யினருக்கும் தலா மூன்றில் ஒரு பங்கு ஒதுக்குதல். அனைத்து வளர்ந்த நாடுகளிலும் இத்தகைய கல்வி நிர்வாகம்தான் அமைந்திருக்கிறது.
அரசுப் பள்ளி ஆசிரியரிடையே இடமாற்றங்கள் பெரும்பாலும் தவிர்க்கப்படுதல்; பணிக்காலத் தொடக்கத்தில் ஒரு பள்ளியைத் தேர்வுசெய்து, அங்கேயே பணி உயர்வு பெறுதல்.
கல்வி நிலையங்கள் ஜனநாயகத்தின் தொட்டில்கள். மாணவர் ஒரு ஆரோக்கியமான ஜனநாயக சமுதாயத்தின் பிரஜைகளாக வளர்வதற்கான பயிற்சி மாணவப் பருவத்திலேயே அளிக்கப்பட வேண்டும். அனைத்து உயர் கல்வி நிலையங்களிலும், மேல்நிலைப் பள்ளிகளிலும் மாணவர் பேரவைகள் அமைக்கப்பட வேண்டும். அவற்றுக்கான தேர்தல்கள் ஜனநாயக முறையில் நடக்க வேண்டும். பள்ளி / கல்லூரி / பல்கலைக்கழக அதிகார அமைப்புகளில் மாணவருக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும்.
கற்றலில் தோல்வி
7. கொடிய ஏற்றத் தாழ்வுகளில் கட்டுண்டு கிடக்கும் இந்திய சமுதாயத்தில், அதனால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிப்பதுடன், பின் தங்கிய மாணவருக்கு, மற்றவர்களுக்குச் சமமான நிலை அடைய அனைத்தும் அளிக்கப்பட வேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி., சமூகக் கல்வி நிலையில் பிற்பட்டவர் அனைவருக்கும் அனைத்து மட்டக் கல்வியிலும், அனைத்து நிறுவனங்களிலும் ஒதுக்கீடு உறுதிப்படுத்தல். இப்பிரிவைச் சேர்ந்தவருக்கும் பெண்கள், மாற்றுத் திறனாளிகள், மாற்றுப் பாலினத்தினர் (transgenders) ஆகியோருக்கும் முழு உதவித்தொகையும், மற்ற நிதி உதவியும் ஆராய்ச்சிக் கல்வி வரை அளித்தல்; மேற்சொன்னவர்களுக்கு உண்டு-உறைவிடப் பள்ளிகளும், விடுதிகளும் பெரும் எண்ணிக்கையிலும், தரமானவையாகவும் அமைத்தல்.
கல்வி நிறுவனங்களில் அனைத்துப் பாகுபடுத்தலும் தடுக்கப்பட்டு, குற்றம் புரிவோர் தண்டிக்கப்படுதல்.மேற்குறிப்பிட்டவை சில முன்னுரிமை பெறுபவை மட்டுமே.
சுதந்திர இந்தியாவின் மாபெரும் தோல்வி, இமாலயத் தோல்வி கல்வியில்தான் ஏற்பட்டிருக்கிறது.
நாட்டின் அனைத்துக் குழந்தைகளும், இளைஞர்களும், கூர்ந்த அறிவும், சிறந்த திறமைகளும் பெற்று, தங்கள் மலர்ச்சிக்கும், சமுதாய வளர்ச்சிக்கும் தங்கள் பங்கைச் செலுத்தும் கல்வி அமைப்பை நிறுவ இந்தியா தவறிவிட்டது. இந்தியாவின் பிரம்மாண்டமான மக்கள்தொகை அனுகூலம் (demographic dividend) நமது வர்க்க-சாதிக் கல்வி அமைப்பால் பயனளிக்கும் திறமை இழந்து கிடக்கிறது. காலம் தாழ்த்தியேனும், இன்றைய பாதையினை மாற்றி, புதிய பாதையில் பயணம் தொடங்க வேண்டும்.
- வே.வசந்திதேவி, முன்னாள் துணை வேந்தர், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக