கோவை, ''போலிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, கல்வி சான்றிதழ்களை, டிஜிட்டல் மயமாக்க, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை திட்டமிட்டுள்ளது,'' என, பல்கலை மானியக்குழு செயலாளர் ஜஸ்பால் சிங் சந்து தெரிவித்தார்.
கோவை, அவினாசிலிங்கம் பல்கலை பட்டமளிப்பு விழா, நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற, பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) செயலாளர் ஜஸ்பால் சிங் சந்து, நிருபர்களிடம் கூறியதாவது:
இந்தியாவில், 40 ஆண்டுகளாக, போலிக்கல்வி சான்றிதழ் சார்ந்த, புகார்கள் அதிகரித்துள்ளன. இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை, யு.ஜி.சி.,யுடன் இணைந்து, கல்வி சான்றிதழ்களை, டிஜிட்டல் மயமாக்க திட்டமிட்டுள்ளது.
இதுசார்ந்த, தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. இதில், அனைத்து மாணவர்களுக்கும், பிரத்யேக எண் வழங்கப்படும். இந்த எண்ணில் தான், மாணவர்களின் கல்விச் சான்றிதழ் பதிவு செய்யப்படும். 'ஆன்லைன்'ல், குறிப்பிட்ட மாணவரின் கல்வித்தகுதியை அறியலாம்.
அனைத்து பல்கலைக்கழகங்களும், தங்களது இணையதளத்தில், கல்விக்கட்டணம் உள்ளிட்ட, அனைத்து செயல்பாடுகளையும் பதிவேற்ற, விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும். இப்பணி மேற்கொள்ள, இரு மாத கால அவகாசம் அளிக்கப்படும். விதிமீறும் பல்கலை குறித்து, யு.ஜி.சி., இணையதளத்தில் விவரம் வெளியிடுவதோடு, கல்விசார் நிதித்தொகை நிறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு, ஜஸ்பால் சிங் சந்து தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக