சமூக அறிவியல் தேர்வில், அதிக மழை பொழியும் இடம் குறித்த கேள்வி, மாணவர்களை குழப்பியது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, நேற்று சமூக அறிவியல் பாடத் தேர்வு நடந்தது. இதில், 10.38 லட்சம் பேர் பங்கேற்றனர். இறுதி தேர்வு என்பதால், வினாத்தாள் கடினமாக இருக்கும் என, மாணவர்கள் பதற்றமாக இருந்தனர்; ஆனால், எளிதாக இருந்தது.ஏற்கனவே, முந்தைய தேர்வுகளில் இடம் பெற்ற வினாக்களாக இருந்தன.
பல மாணவர்கள், 'சென்டம்' எடுக்க வாய்ப்புள்ளது. சில மாணவர்களுக்கு, ஒரு மதிப்பெண் வினாவால், திடீர் குழப்பம் ஏற்பட்டது. அதாவது, 'பொருத்துக' பகுதியில், அதிக மழை பொழியும் இடம் தொடர்பான கேள்வி இடம் பெற்றது. அதில், 'ஷில்லாங்' என்ற விடை, இடம் மாறி கொடுக்கப்பட்டிருந்தது. புத்தகத்தில், அதிக மழை பொழியும் இடம், 'மவ்சின்ராம்' என்ற பகுதியாக, மாணவர்கள் படித்துள்ளனர். அந்த மவ்சின்ராம் கிராமம், மேகாலயா மாநிலத்தில், ஷில்லாங் நகரத்திற்கு அருகில் இருப்பதால், வினாத்தாளில், 'ஷில்லாங்' என்ற பெயரே இடம் பெற்றிருந்தது. அதனால், மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். நேற்றைய தேர்வில், இரு மாணவர்கள் உட்பட, 18 பேர், காப்பியடித்து பிடிபட்டனர்.
பழைய திட்ட குழு தவறான கேள்வி : இந்தியாவில், 1950ல், முன்னாள் பிரதமர் நேருவால் திட்டக் குழு ஏற்படுத்தப்பட்டது. குழுவின் தலைவராக, பிரதமர் இருப்பார். இந்நிலையில், 2014ல், பா.ஜ., ஆட்சி வந்ததும், திட்டக் குழு கலைக்கப்பட்டு, 'நிதி ஆயோக்' என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. ஆனால், 2014க்கு பின், 10ம் வகுப்பு பாடத்திட்டம் மாற்றப்படவில்லை. அதனால், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, திட்டக் குழு குறித்த பாடம் இன்னும் உள்ளது. எனவே,
நேற்றைய தேர்வில், 'திட்டக் குழுவின் தலைவர் யார்' என்ற கேள்வி இடம் பெற்றது. மாணவர்களுக்கு, இதில் எந்த குழப்பமும் ஏற்படவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக