லேபிள்கள்

30.3.17

TNTET - 2017 :ஆசிரியர் தகுதித் தேர்வை தள்ளிவைக்கக் கோருவதுமனிதாபிமானமற்ற செயல்: தங்கம் தென்னரசுவுக்கு வைகைச்செல்வன் பதிலடி

ஆசிரியர் தகுதித் தேர்வை தள்ளிவைக்க கோருவது மனிதாபிமானற்ற செயல் என்று திமுக எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசுவுக்கு பள்ளிக் கல்வித்துறையின் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பதில் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,

 ''ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான தேர்ச்சியில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகையை தமிழக அரசு அளித்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாகதகுதித்தேர்வு நடத்தப்படாததற்கு இந்த வழக்குதான் காரணம். இந்த வழக்கை எவ்வளவு விரைவுபடுத்த முடியுமோ அவ்வளவு விரைவுபடுத்தி வழக்கை முடிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

தற்போது வேலையில்லாத பட்டதாரிகள் வேலை பெறும் நோக்கில் தமிழக அரசு விரைந்து தகுதித்தேர்வை நடத்த முயற்சி செய்து வரும் நிலையில், தேர்வை தள்ளிவைக்கக் கோருவது மனிதாபிமானற்ற செயல். ஆனால், முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, தகுதித் தேர்வு வழக்கை தமிழக அரசுதான் நிலுவையில் வைத்திருந்தது என்று அபாண்டமாக குற்றம்சாட்டுகிறார். நீதிமன்றத்தில் நாமாக ஒரு வழக்கை நிலுவையில் வைக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், திமுகவினருக்கு ஏன் தெரியவில்லை.தகுதித் தேர்வை ஏப்ரல் மாதத்துக்குப் பதில் ஜூலை அல்லதுஆகஸ்டு மாதம் நடத்த வேண்டும் என்பதும் தேவையற்றது. தனியார் சுயநிதி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தகுதித் தேர்வை ஏப்ரல் மாதத்தில் எதிர்கொள்வது அவர்களுக்கு வசதியாக இருக்கும். ஏனென்றால் கல்வி ஆண்டு முழுவதும் பயிற்சி அளித்த அந்த ஆசிரியர்கள் தங்கள் பாடங்களில் போதுமான பயிற்சி பெற்றிருப்பார்கள்.

தகுதித் தேர்வு தேர்ச்சியில் வகுப்பு வாரியான மதிப்பெண் குறைப்பு (5 சதவீதம்) என்பது தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. பட்டதாரிகளின் கோரிக்கையை ஏற்று முதல்வர் ஜெயலலிதா அனைத்து இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் 5 சதவீத மதிப்பெண் சலுகையை வழங்கி ஆணை பிறப்பித்தார். அந்த ஆணையை எதிர்த்து தொடரப்பட்டே வழக்குதான் தகுதித் தேர்வு நடத்துவதில் ஏற்பட்ட காலதாமதத்துக்கு காரணமே தவிர, தமிழக அரசு காரணம் அல்ல'' என்று வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக