லேபிள்கள்

12.3.17

ஆசிரியைகளை நள்ளிரவில் விரட்டியடித்த போலீஸ்

பணி நிரந்தரம் கோரி, உண்ணாவிரதம் இருந்த ஆசிரியைகளை, போலீசார், நள்ளிரவில் வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

அரசு பள்ளிகளில், ஐந்து ஆண்டுகளுக்கு முன், 16 ஆயிரத்து, 549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள், உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல் உள்ளிட்ட பாடங்களை நடத்தினர். அவர்களுக்கு, மாதம், 7,000 ரூபாய் மட்டும் சம்பளம் வழங்கப்படுகிறது. 


இந்நிலையில், பணி நிரந்தரம் கோரி, 5,000க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள், சென்னையில், நேற்று முன்தினம், உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். 


அவர்களிடம், அரசு தரப்பில், அதிகாரபூர்வ பேச்சு நடத்தவில்லை. போராட்ட பந்தலில், சீனிவாசன் என்ற ஆசிரியர், விஷ விதையை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, ஆசிரியர்களை போலீசார் அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி, பல முகாம்களில் தங்க வைத்தனர். 


நேற்று நள்ளிரவு, 12:30 மணிக்கு, அனைத்து முகாம்களில் இருந்தும், ஆசிரியர்களை கட்டாயமாக, போலீசார் வெளியேற்றினர். அதில், வெளி மாவட்டங்களை சேர்ந்த, 1,000 ஆசிரியைகளும் இருந்தனர். 'நள்ளிரவில் வெளியில் பாதுகாப்பு இல்லை; முகாம்களில் தங்கி விட்டு, காலையில் செல்கிறோம்' என அவர்கள், போலீசாரிடம் வேண்டுகோள் விடுத்தனர். 
அதை, போலீசார் கண்டுகொள்ளாமல், இரக்கமின்றி அனைவரையும், நடுரோட்டில் துரத்தி விட்டனர். இதனால், ஆசிரியைகள், எங்கு செல்வது என, தெரியாமல், பிளாட்பாரங்களில் அச்சத்தில் விடியும் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இந்த சம்பவத்துக்கு, ஆசிரியர் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. 
தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச் சங்க தலைவர் ராஜ்குமார் கூறியதாவது: 
பெண்கள் என்றும் பாராமல், போலீசார் நள்ளிரவில் கடுமையாக நடந்து கொண்டனர்; அமைதியாக உண்ணாவிரதம் இருந்தவர்களிடம், போலீசார் நடந்து கொண்ட விதம், ஆசிரியர்கள், மாணவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 
சம்பந்தப்பட்ட போலீசார் மீது, அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில், அனைத்து ஆசிரியர் சங்கங்களும் போராட்டம் நடத்தும். 
இவ்வாறு அவர் கூறினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக