லேபிள்கள்

31.8.17

ஆதார் எண் சமர்ப்பிக்க டிச., 31 வரை அவகாசம்

 மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளை பெற, ஆதார் அடையாள எண் சமர்ப்பிக்க, டிச., 31 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அடையாள அட்டைக்காக, மக்களின் தனிப்பட்ட ரகசிய தகவல்கள் சேகரிப்பது, தனிநபர் சுதந்திரத்தில் தலையிடுவதாகும் எனக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் பலர் மனு தாக்கல் செய்துள்ளனர். 
இந்த வழக்கை விசாரிக்க, ஜூலை, 18ல், ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வை, ஐந்து நீதிபதிகள் அடங்கிய, உச்ச நீதிமன்ற அமர்வு அமைத்தது.
ஆக., 24ல், 'தனிநபர் சுதந்திரம், மக்களின் அடிப்படை உரிமை; இது, வாழ்வுரிமையின் ஓர் அங்கம்' என, ஒன்பது நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்தது.
இதற்கிடையே, மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் பலனை பெற, ஆதார் கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்து, தொடரப்பட்ட மூன்று வழக்குகளை, உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையில், இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது. 
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ஷ்யாம் திவான், ''தனிநபர் சுதந்திரம், மக்களின் அடிப்படை உரிமை; இது, வாழ்வுரிமையின் ஓர் அங்கம் என, சமீபத்தில், உச்ச நீதிமன்றத்தின், ஒன்பது நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்தது. 
''இதையடுத்து, ஆதார் தொடர்பான மனுக்களை, பொருத்தமான அமர்வு விசாரிக்க வேண்டும்,'' என்றார்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான, அட்டர்னி ஜெனரல், கே.கே.வேணுகோபால், ''மத்திய அரசு திட்டங்களின் பலனை பெறுவதற்கு, ஆதார் அட்டையை சமர்ப்பிக்க, டிச., 31 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது,' என்றார். 
இதையடுத்து, 'இந்த மனுக்கள் மீதான விசாரணை, நவம்பர் முதல் வாரம் நடக்கும்' என, நீதிபதிகள் அறிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக