லேபிள்கள்

4.10.17

தொலைதூர கல்வி மையங்கள் தரும் பட்டம் செல்லாது!

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதுார கல்வி மையங்களில் தரப்படும் பட்டம் எதுவும் செல்லாது என்று, ஐகோர்ட்டில்பல்கலை மானியக்குழு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது; இதனால், இந்த மையங்களில் படித்துள்ள

பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் எல்லை, கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதியாகும். இப்பகுதிகளில் உள்ள உறுப்புக் கல்லுாரிகள் மற்றும் இணைப்புக் கல்லுாரிகளுக்கு மட்டுமே, பல்கலையால் அங்கீகாரம் தர முடியும். அதேபோன்று, இந்த எல்லையில் மட்டுமே, தொலைதுார கல்வி மையங்களை நடத்த வேண்டும்.

ஆனால், பாரதியார் பல்கலை நிர்வாகம், சி.பி.ஓ.பி., (Centre for Participatory and Online Programme), சி.சி.ஐ.ஐ., (Centre for Colabration of Industries and Institutions), சி.பி.பி., (Centre for Participatory Programme) என பல்வேறு பெயர்களில், 'எல்லை மீறி' தொலைதுார கல்வி மையங்களை, பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இதைத் தடுப்பதற்கு, தமிழக அரசின் உயர் கல்வித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

380 கல்வி மையங்கள்

இதனால், வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் என்று 380க்கும் அதிகமான தொலைதுார கல்வி மையங்களைத் துவக்க, பாரதியார் பல்கலை அனுமதி அளித்துள்ளது. இந்த மையங்களில், கலை, அறிவியல் படிப்புகளுக்கு மட்டுமின்றி, மெடிக்கல் கவுன்சில், பார்மசி கவுன்சில் மட்டுமே அனுமதி தரக்கூடிய பல்வேறு பாடப்பிரிவுகளும் நடத்தப்பட்டு, பட்டம் மற்றும் பட்டயங்கள் வாரி வழங்கப்படுகின்றன.

வெறும் பத்துக்குப் பத்தடி அளவிலுள்ள கட்டடங்களில் செயல்படும் இந்த மையங்களால், முறையாக வகுப்புகள் நடத்தப்படுவதில்லை; வாரத்தில் இரு நாட்கள் மட்டுமே வந்தால் போதுமென்று விளம்பரம் தரப்படுவதால், ஏராளமான மாணவர்கள் இதில் சேர்கின்றனர். இவர்களின் விடைத்தாள்களும், பெயரளவில் திருத்தப்பட்டு, தேர்ச்சி தரப்பட்டு, பாரதியார் பல்கலை பெயரிலேயே பட்டங்கள் தரப்படுகின்றன.

அதேநேரத்தில், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், பணத்தையும், பல ஆண்டுகளையும் செலவழித்து, கஷ்டப்பட்டு படித்துத் தேர்வு எழுதும் மாணவர்களால் எளிதில் தேர்ச்சி பெற முடிவதில்லை. இதன் காரணமாக, கல்லுாரிகளை விடுத்து, இந்த மையங்களை நாடுவோர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. தமிழகத்தில் பெறப்படும் கலை அறிவியல் படிப்புகளுக்கான பட்டத்துக்கு, எந்த மதிப்புமே இல்லாமல் போகும் அபாயம் உருவாகியுள்ளது.

இதைக் கண்டித்து, பல முறை மனுப்போர் நடத்தியும் பலனில்லாமல் போனதால், தமிழ்நாடு சுயநிதி கலை அறிவியல் கல்லுாரிகள் சங்கம் சார்பில், ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பாரதியார் பல்கலை பதிவாளர், பல்கலை மானியக்குழு செயலர், தொலைதுாரக் கல்வி அமைப்பு துணைச் செயலர், தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலர் ஆகியோர், இவ்வழக்கின் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர்.

தொலைதுார கல்வி மையங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று கோரும் இந்த மனுவின் மீது விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், பல்கலை மானியக் குழு சார்பில், அதன் கல்வி அலுவலர் மேகா கவுசிக், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரம், பாரதியார் பல்கலையின் அத்தனை அத்துமீறல்களையும் அம்பலப்படுத்தியுள்ளது.

இந்தியாவிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும், பல்கலை மானியக்குழுவின் விதிகளின் படியே செயல்பட வேண்டும் என்பதற்கான பல்வேறு சட்டப்பூர்வமான தரவுகளையும் சுட்டிக் காட்டியுள்ளது இந்த மனு. பாரதியார் பல்கலை எந்த சட்டத்தையும், விதியையும், சுப்ரீம் கோர்ட் உத்தரவையும் மதிக்கவே இல்லை என்பதையும் பட்டவர்த்தனமாக விளக்கியுள்ளது.

பேராசிரியர் யஷ்பால், சட்டீஸ்கர் அரசுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவின் மீது, 2005ல் சுப்ரீம் கோர்ட் அளித்த உத்தரவின்படி, மாநில பல்கலைக்கழகங்கள், தனியார் மையங்களுடன் இணைந்து உரிமம் அடிப்படையில் தொலைதுார கல்வி மையங்களை நடத்தக்கூடாது என்பதை பாரதியார் பல்கலைமீறியுள்ளதை இந்த மனு, பல இடங்களில் தெளிவுபடுத்தியுள்ளது.

எல்லை மீறல்

மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள வேறு சில முக்கிய அம்சங்கள்:கோவை பாரதியார் பல்கலை, அதன் எல்லைக்குட்பட்ட கோவை, நீலகிரி மற்றும் ஈரோடு (திருப்பூர் மாவட்டத்தையும் உள்ளடக்கியது) மாவட்டங்களில் தொலைதுார கல்வி மையங்களை நடத்தலாம். ஆனால், எல்லையைத் தாண்டி, மையங்களை நடத்தி வருகிறது.

பல்கலைக்கழகங்களுக்கான எல்லைகள், தனியார் மையங்களுடன் இணைந்து தொலைதுாரக் கல்வி மையங்களை நடத்துவது தொடர்பாக, பல்கலை மானியக்குழு சார்பில் 2001 ஆக.,9 அன்று, விரிவான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதை பல்கலை நிர்வாகம் மதிக்கவே இல்லை.
பல்கலை மானியக்குழு சமீபத்தில் வெளியிட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, பல்கலை வளாகத்திலும், அதன் எல்லைக்குட்பட்ட பிற பகுதிகளிலும் 'கோர்ஸ்'களை நடத்தி, பட்டங்களை வழங்கலாம். 

வேறுதனியார் மையங்களுடன் இணைந்து,கல்வி மையங்களை நடத்துவதாக இருந்தால், அதற்கு பல்கலை மானியக்குழுவிடம் முன் அனுமதி பெறுவது அவசியம்.பல்கலை மானியக்குழு சார்பில், 2009 ஜூன் 15 அன்று, நாடு முழுவதும் உள்ள மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், சுப்ரீம் கோர்ட் உத்தரவை சுட்டிக்காட்டி, 'தங்களது பல்கலை எல்லையைத் தாண்டிய பகுதியில், இணைப்புக் கல்லுாரிகள், வளாக மையம், கல்வி மையம் போன்றவற்றை நடத்தவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.

2016 மே 4 அன்று, அனைத்து மாநில உயர் கல்வித்துறை செயலர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், 'சுப்ரீம் கோர்ட் உத்தரவை அமல்படுத்தும் வகையில், மாநில அரசின் சட்டங்களில் உரிய திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும்; மாநில எல்லையைத் தாண்டி, பல்கலைகள் நடத்தும் கல்வி மையங்களை உடனே நிறுத்த வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சில பல்கலைக்கழகங்கள், தங்களது எல்லையைத் தாண்டி, இத்தகைய மையங்களை நடத்துவது முற்றிலும் சட்டவிரோதமானது. மத்திய மற்றும் மாநில பல்கலைக்கழகங்கள், அந்தந்த பல்கலைச் சட்ட விதிகள் அனுமதித்த பகுதிகளில், பல்கலை மானியக்குழுவின் முன் அனுமதி பெற்ற பின்பே, எந்த பாடப்பிரிவையும் நடத்த வேண்டும்.

பட்டம் செல்லாது

ஆனால், பாரதியார் பல்கலைக்கழகம், பல்கலை மானியக்குழுவின் விதிகளுக்கு முரணாகவும், அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில், இந்திய மெடிக்கல் கவுன்சில், இந்திய பார்மசி கவுன்சில் உள்ளிட்ட சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்ற அமைப்புகள் எதிலும் அனுமதி பெறாமலும், பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, இளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகளை, சட்டவிரோதமாக தொலைதுார கல்வி மையங்களால் நடத்தப்படுகிறது.

பல்கலையின் பெயர் மற்றும் 'லோகோ'வுடன், இந்த மையங்கள் விளம்பரங்கள் வெளியிடுவதால், பொது மக்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எல்லோரும், இந்த மையங்களை நம்புகின்றனர். இந்த மையங்கள் அனைத்தும், சட்டத்துக்கு விரோதமாகவும், பல்கலை மானியக்குழு விதிகளை மீறியும், சட்டப்பூர்வ அங்கீகார அமைப்புகளின் அனுமதியின்றியும் நடத்தப்படுவதால், இந்த மையங்களில் படித்து வாங்கிய பட்டம், சட்டப்படி செல்லாது.

மத்திய அரசின் அறிவுறுத்தல்கள், பல்கலை மானியக்குழு மற்றும் சட்டப்பூர்வ அங்கீகார அமைப்புகளின் பலவிதமான எச்சரிக்கைகள், கடிதங்கள், இணையங்களில் வெளியிடப்பட்ட அறிவிக்கைகள் என எதையும் கருத்தில் கொள்ளாமல், இந்த மையங்களை பாரதியார் பல்கலை நடத்தி வருகிறது.

இத்தகைய சட்டவிரோத மையங்களில் படித்துள்ள ஏராளமான மாணவர்கள், தங்கள் வாழ்க்கையின் பல ஆண்டுகளையும், பணத்தையும் இழந்துள்ளனர். எனவே, பல்கலை மானியக்குழு சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த கருத்துக்களின் அடிப்படையில், உரிய உத்தரவை வழங்க வேண்டும்.இவ்வாறு, அந்த பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலை மானியக்குழுவே, பகிரங்கமாக இந்த மையங்களை 'இல்லீகல்' என்று கூறியுள்ளதோடு, இந்த மையங்களில் தரப்படும் பட்டங்கள் செல்லாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. இதனால், இந்த மையங்களில் படித்து பல ஆயிரம் மாணவர்கள் வாங்கி வைத்துள்ள பட்டத்திற்கு என்ன மதிப்பு என்ற கேள்வி எழுந்துள்ளது. அத்துடன், சுப்ரீம் கோர்ட் உத்தரவை பாரதியார் பல்கலை நிர்வாகம் மீறியுள்ளதாகவும் கூறியுள்ளதால், ஐகோர்ட் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்புஎகிறியுள்ளது.

எந்த ஆண்டு முதல்?

கல்வியாளர்கள் கூறுகையில், 'பல்கலை மானியக்குழுவின் சுற்றறிக்கையின்படி பார்த்தால் கடந்த, 2001ம் ஆண்டுக்குப்பின், பாரதியார் பல்கலையின் தொலை துாரக்கல்வி மையத்தால் வழங்கப்பட்ட பட்டங்கள் செல்லாது என்றே தெரிகிறது. இதுகுறித்து, மானியக்குழுதான், மாணவர்களின் நலன்கருதி வெளிப்படையான அறிவிப்பினை வெளியிட வேண்டும்' என்றனர். 

ஏன் எதிர்க்கிறது சுயநிதி கல்லுாரிகள் சங்கம்?

கல்லுாரிகளில் சேர்ந்து படிக்க இயலாத கிராமத்து இளைஞர்கள், வேலைக்குச்செல்வோர், உயர் கல்விக்கு விரும்பும் ஏழை மாணவர்கள் என பல தரப்பினருக்கும் தொலைதுார கல்வி மையங்கள் உதவும்போது, அவற்றை ஏன் மூட வேண்டும் என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். இந்த மையங்களை அனுமதிக்கக்கூடாது என்று சட்டரீதியாகப் போராடும் தமிழ்நாடு சுயநிதி கல்லுாரிகள் சங்கம், இதற்குக் கூறும் காரணங்கள், யோசிக்க வைப்பவை.
* மாணவர்களிடம் 'ரெகுலர் கோர்ஸ்' என்று இந்த மையங்கள் ஏமாற்றுகின்றன. ஆனால், இவை தொலைதுாரக் கல்வி என்பது மட்டுமில்லாது, இந்த மையங்களுக்கு பல்கலை மானியக்குழுவின் அங்கீகாரமே கிடையாது.
* அரசாணை, முழு நேர ஆசிரியர்கள், ஆய்வுக்கூடம், நுாலகம் உள்ளிட்ட கட்டமைப்பு எதுவும் இந்த மையங்களுக்கு இல்லை.
* கல்வி சார்ந்த அமைப்புகள், இந்த மையங்களை நடத்துவதில்லை என்பதால் கல்வியின் தரம் கேள்விக்குறியாகிறது.
* மாணவர்களுக்கு வருகைப்பதிவேடு கிடையாது; பல்கலை இணைப்புக் கல்லுாரிகளில், 75 சதவீதத்துக்குக் குறைவான வருகை இருந்தால், ஒரு மாணவன் தேர்வு எழுத முடியாது.
* மையங்களில் நடக்கும் தேர்வு, முறையாகக் கண்காணிக்கப்படாததால், நிறைய முறைகேடுகள் நடக்கின்றன. இதற்கான விடைத்தாள் திருத்துவதும், மாலை 5:30 மணிக்குப் பின், முறையற்ற பணியாக நடக்கிறது.
* கஷ்டப்பட்டு கல்லுாரிக்குச்சென்று படிக்கும் மாணவனுக்கும், இத்தகைய மையங்களில் படிக்கும் மாணவனுக்கும் ஒரே மாதிரியான பட்டம் தரப்படுகிறது; அதில், எந்தவிதமான வேறுபாடும் சுட்டிக்காட்டப்படுவதில்லை.
* இணைப்புக் கல்லுாரிகள் தராத அல்லது தர முடியாத 'கோர்ஸ்'களையும் இந்த 'இல்லீகல்' மையங்களில் நடத்துகின்றனர்.
* வகுப்புகள் நடத்தாமல், செயல்முறைப் பயிற்சி அளிக்காமலே தேர்வுக்கு அனுமதிக்கின்றனர்.
* இந்த மையங்களால், பாரதியார் பல்கலைக்கு அவப்பெயர் ஏற்படுகிறது; அந்த அவப்பெயர், இதன் இணைப்புக் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களையும் பாதிக்கிறது; அவர்களுக்கும் அங்கீகாரம் கிடைக்காமல் போகிறது.

அனுமதி அளித்தோரே பொறுப்பு!


பிரின்ஸ் கஜேந்திரபாபு, கல்வியாளர்: 
பாரதியார் பல்கலை, யு.ஜி.சி., உத்தரவை மீறி, எல்லை தாண்டி தொலைதுார கல்வி மையங்கள் அமைத்து செயல்படுத்தி கொண்டிருப்பது, சட்டப்படி குற்றமாகும். கல்வியை வியாபாரமாக்கும் இம்முயற்சியால், பாதிக்கப்படுவது மாணவ சமுதாயம் மட்டுமே. இதன்மூலம் கிடைத்த, கல்விச்சான்று செல்லாது என்ற நிலை வந்தால், இம்மையங்களுக்கு அனுமதி அளித்தவர்களே, பொறுப்பேற்க வேண்டும். பதவி உயர்வு காரணங்களுக்காக, தொலைதுார கல்வி முறையில் படித்தவர்களின் கல்விச்சான்றிதழ் செல்லாது என அறிவிக்கும் போது, தன்னெழுச்சியாக மாணவர்கள் திரண்டு போராடுவது அவசியம்.

நிதியை நிறுத்த வேண்டும்!

பாலகுருசாமி, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர்:
 பாரதியார் பல்கலையின், அத்துமீறல் செயலை கட்டுப்படுத்த, தமிழக அரசாலும், யு.ஜி.சி.,யாலும் முடியும். பல்கலைக்கான நிதியை நிறுத்தி கண்டிப்பை வெளிப்படுத்த வேண்டிய, யு.ஜி.சி., மவுனம் சாதிக்கிறது. தமிழக அரசுக்கு, துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க, முழுஅதிகாரம் உண்டு. சிண்டிகேட் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றினால், துணைவேந்தரால் எதுவும் செய்ய முடியாது. தொலைதுார கல்வி மையங்களால், 'கரன்சி' கிடைப்பதால், தட்டி கேட்க வேண்டியவர்கள், வாய்மூடி வேடிக்கை பார்க்கின்றனர். எதற்கெல்லாமோ போராடும் மாணவ சமுதாயம், தனக்கான கல்வி
வியாபாரமாவதற்கு எதிராக, போராட முன்வர வேண்டும்.

அப்பட்டமான சட்டவிரோதம்

ஏ.எம்.எம்.கலீல், தலைவர், தமிழ்நாடு சுயநிதி கல்லுாரிகள் சங்கம்: 
பல்கலை மானியக் குழுவே, இந்த மையங்கள் வேண்டாமென்று தெள்ளத் தெளிவாகக் கூறி விட்டது; அதன் பின்னும், இந்த மையங்களை பல்கலை நிர்வாகம் நடத்த அனுமதிப்பதில் துளியும் நியாயமில்லை. இது அப்பட்டமான சட்டவிரோதமாகும். மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட் உத்தரவுகள், பல்கலை மானியக்குழுவின் எச்சரிக்கை அத்தனையையும் மீறி, செல்லாத பட்டத்தைத் தருவதற்கு, இந்த மையங்களை பல்கலை நிர்வாகமே நடத்தினால், அந்த பல்கலைக்கும், போலி கல்வி நிறுவனத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

இப்போது, பல்கலை மானியக்குழுவே, இதை பகிரங்கமாகத் தெரிவித்திருப்பது, வரவேற்கத்தக்க விஷயம். பல்கலை மானியக்குழுவின் முடிவு, எங்களைக் கட்டுப்படுத்தாது என்று பாரதியார் பல்கலை நிர்வாகம் அறிவிக்கட்டும்; பார்க்கலாம். இவ்வழக்கில், நீதி மன்றத்தில் நியாயமான முடிவு கிடைக்குமென்று நம்புகிறோம்.

சுண்டல் வியாபாரமானது கல்வி!

'பாடம்' நாராயணன், சமூக ஆர்வலர்: 
பல ஆண்டுகளாக தொலைதுார கல்வி மையங்களில், மிகப்பெரிய சுரண்டல் நடக்கிறது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழங்களுக்கு, இதுபோன்ற காரணங்களால் தான், அவப்பெயர் ஏற்பட்டது. சென்னை அண்ணா பல்கலையே, பொறியியல் படிப்பை தொலைதுார கல்வியாக அறிவித்து பின், திரும்ப பெற்றது. ஏனெனில், தொலைதுார கல்வியில், தனியார் பயிற்சி மையங்களோடு சேர்ந்து கூட்டு சதி நடக்கிறது. இதில் வரும் லஞ்சத்தில், துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்ட அனைவருக்கும் பங்குண்டு. சுண்டல் வியாபாரம் போல, கல்வியை கூவி விற்பதாக இச்செயல்பாடு அமைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக