லேபிள்கள்

14.5.18

மாணவர் சேர்க்கை சரிவால் பணிநிரவல்

மாணவர் சேர்க்கை சரிவை காரணம் காட்டி, ஓவியப்பாட ஆசிரியர்களை, பணிநிரவல் செய்யும் நடவடிக்கைக்கு, எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கோவை மாவட்டத்தில், 192 அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில், 109 பள்ளிகளில், ஓவிய ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். ராஜினாமா, பணி ஓய்வு காரணமாக, 14 இடங்கள் காலியாக உள்ளன. மற்ற பள்ளிகளில், ஓவிய பாடத்துக்கு நிரந்தர ஆசிரியர் இல்லை. இப்பணியிடங்களுக்காக, கடந்தாண்டு செப்டம்பரில்நடத்தப்பட்ட சிறப்பாசிரியர் தேர்வுக்கு,முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதனால், காலிப்பணியிடங்களை நிரப்புவதில் சிக்கல் எழுந்துள்ளது.
கல்வி இணை செயல்பாடுகளான, தையல், இசை, ஓவியம் உள்ளிட்ட, சிறப்பு பாடங்களுக்கும், தற்போது சிலபஸ் தயாரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஆசிரியர் காலிப்பணியிடங்களால், மாணவர்களுக்கு இதை கற்பிக்க இயலாத சூழல் உள்ளதாக, புகார் எழுந்துள்ளது. இதோடு, கல்வித்துறை சமீபத்தில் வெளியிட்ட சுற்றறிக்கையால், பல பள்ளிகளில் ஓவிய பாடமே, காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.குறிப்பாக, 250 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளில், பணிபுரியும் ஓவிய ஆசிரியர்கள், வேறு பள்ளிகளுக்கு, வரும் கல்வியாண்டில், பணிநிரவல் செய்யப்படவுள்ளனர். இது, ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஓவிய ஆசிரியர்கள் சிலர் கூறுகையில்,'அரசுப்பள்ளி மாணவர்களின் தனித்திறமைகளை ஊக்குவிக்க, சிறப்பு பாடங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம். மாணவர் சேர்க்கை குறைவதற்கும், கலைப்பாட ஆசிரியர்களுக்கும் சம்பந்தமே இல்லை. இந்நிலையில், 250 மாணவர்களுக்கு கீழ் படிக்கும், அரசுப்பள்ளி ஓவிய ஆசிரியர்களை,பணிநிரவல் செய்யும் முயற்சிகள் நடக்கின்றன. இப்பள்ளிகளின் அடிப்படை பிரச்னைகளை தீர்க்காமல், ஆசிரியர்களை பணிநிரவல் செய்வதால், எந்த பலனும் இல்லை. இதன்மூலம், மேலும் மாணவர் சேர்க்கை சரியுமே தவிர அதிகரிக்காது' என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக