லேபிள்கள்

3.6.18

அவசர கதியில் கல்வி நிர்வாக மாற்றம் அலுவலக கோப்புகள் மாயமாகும் அபாயம்

நிர்வாக மாற்றத்தின் ஒரு பகுதியாக, அவசர கதியில் அலுவலகம் மாறுவதால், தொடக்க கல்வி அலுவலகங்களில், கோப்புகள் மாயமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித் துறை நிர்வாகத்தில், பெரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மெட்ரிக் இயக்குனரகம், தொடக்க கல்வி இயக்குனரகம் மற்றும் ஆங்கிலோ - இந்தியன் பள்ளி நிர்வாகத்தில் இருந்த, மாவட்ட அதிகாரிகள் பதவி, ரத்து செய்யப்பட்டுள்ளது.

மாற வேண்டும்

இந்த அலுவலகங்களும், அலுவலர் பதவிகளும், பள்ளிக் கல்வியின் கட்டுப்பாட்டில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளின் கீழ் வர உத்தரவிடப்பட்டுள்ளது.கடந்த வாரம், இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், உடனடியாக, மற்ற அலுவலகங்களை மூடி விட்டு, முதன்மை கல்வி அதிகாரிகள் காட்டும், புதிய அலுவலகங்களுக்கு மாற வேண்டும் என, ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

நிர்வாக சீர்திருத்தத்தின் எதிரொலியாக, தற்போதுள்ள, 67 கல்வி மாவட்டங்களுடன், கூடுதலாக, 52 கல்வி மாவட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இந்த புதிய கல்வி மாவட்டங்களுக்கு, பழைய அலுவலகங்களில் இருந்த கோப்புகளை மாற்றவும், புதிய அலுவலகம் அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இதற்காக, பழைய கட்டடங்கள், பயன்படுத்தப்படாத கட்டடங்கள், மாணவர்கள் மிக குறைவான பள்ளி வளாகங்கள், தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறையின் அவசர முடிவால், பல தொடக்க க்கல்வி அலுவலகங்களின் கோப்புகள் மாயமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கால அவகாசம் வழங்காமல், கோப்புகளை மாற்ற சொல்வதால், நிர்வாக குளறுபடிகள் ஏற்படும் என, ஊழியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.இது குறித்து, பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்க பொதுச்செயலர் சீனிவாசன், பள்ளிக் கல்வி இயக்குனர் இளங்கோவனிடம் மனு அளித்துள்ளார்.

வரவேற்கிறோம்

அதில், 'நிர்வாக மாற்றத்தை வரவேற்கிறோம். ஆனால், தற்போதுள்ள பழைய அலுவலகங்களை உடனடியாக ரத்து செய்து, புதிய அலுவலகங்களுக்கு மாற வேண்டும் என்பதால், பல நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.'மேலும், மாவட்ட கல்வி அலுவலக எல்லைகளும் மாற்றப்பட்டதால், அதற்கு ஏற்ப, கோப்புகளை மாற்றுவதற்கு, கால அவகாசம் வழங்க வேண்டும்' என, கோரப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக