குறைந்தது 10 நாள்களுக்கு மேல் பள்ளிக்கு
வராத மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்துவர நடவடிக்கை
எடுக்க வேண்டும் என கல்வி அதிகாரிகளுக்கு தொடக்கக் கல்வி
இயக்குநர் ஆர்.இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும்
கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆய்வுக்குச்
செல்லும்போது மாணவர் வருகைப் பதிவேட்டை ஆய்வு செய்து குறைந்தது 10 நாள்களுக்கு மேல் பள்ளிக்கு
வராத குழந்தைகளைக் கண்டறிய வேண்டும்.
மாணவர் பள்ளிக்கு வராத காரணங்களை அந்தந்த வகுப்பு மாணவர்களிடமே
கேட்டறிந்து ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மூலமாக
அந்த மாணவரை பள்ளிகளுக்கு மீண்டும் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளிகளில் உள்ள கழிப்பறை வசதி, குடிநீர் வசதி போன்றவை
சார்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் திறந்தவெளி கிணறுகள், உயர் அழுத்த மின்கம்பங்கள், பழுதடைந்த கட்டடங்கள் போன்றவை
குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற வகையில் இருந்தால் அவற்றை உடனடியாக ஆய்வறிக்கையில்
குறிப்பிட்டு நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளிகளுக்கு ஆய்வுக்குச் செல்லும்போது அனைத்து வகுப்புகளுக்கும்
சென்று கற்றல், கற்பித்தல் நிகழ்வுகளைப்
பார்வையிட வேண்டும். கற்றல் அடைவுத் திறன், வாசிப்புத் திறன்,எழுதும் திறன், பொது அறிவு ஆகியவற்றை
மாணவர்களிடம் உரையாடியும், எழுத, படிக்கச் சொல்லியும்
அறியவேண்டும்.
பழமொழிகள் கூறுதல், பேசுதல், நடித்தல், படைப்பாற்றல் செயல்பாடுகள் போன்றவை பள்ளிகளில்
தவறாமல் நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டும்.
பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் ஒவ்வொரு மாதமும் முறையாக
நடைபெறுவது குறித்தும், அந்தக் கூட்டங்களில்
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
பள்ளிகளில் பராமரிக்கப்படும் மாணவர் சேர்க்கைப் பதிவேடு,ஆசிரியர் வருகைப் பதிவு, அரசு நலத்திட்டப் பொருள்கள்
வழங்கப்படும் பதிவேடு உள்ளிட்டவற்றை சரிபார்க்க வேண்டும். இலவச புத்தகங்கள், நோட்டுகள், பஸ் பாஸ் உள்ளிட்ட பொருள்கள்
உரிய நேரத்தில் சென்றடைந்துள்ளதா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
ஆண்டாய்வு மேற்கொள்ளும்போது ஏதேனும் குறைபாடுகள்
காணப்பட்டால் அவற்றை களைவதற்கு குறிப்பிட்ட பள்ளிக்கு அவகாசம் வழங்க வேண்டும்.
அதன்பிறகு, மீண்டும் அந்தப் பள்ளியை
ஆய்வுசெய்து குறைபாடுகள் களையப்பட்டுள்ளனவா என பார்க்க வேண்டும்.
ஆண்டாய்வுக்குச் செல்லும்போது நாள் முழுவதும் பள்ளியிலேயே
இருந்து ஆய்வினை மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளைப் பார்வையிடும்போது குறைந்தபட்சம்
இரண்டு மணி நேரம் பள்ளியில் இருந்து செயல்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு
அலுவலரும் ஆண்டுக்கு 180 பள்ளிகளைப் பார்வையிட வேண்டும்; 46 பள்ளிகளில் ஆண்டாய்வை
மேற்கொள்ள வேண்டும்.
பள்ளிகளை ஆய்வு செய்யும்போது இந்த நடைமுறைகள்
பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என ஆர்.இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக