பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு கட்டணத்தை (ஸ்பெஷல் பீஸ்), இரண்டாண்டுகளாக வழங்காமல் கல்வித் துறை இழுத்தடிக்கிறது.
தமிழகத்தில், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 2008ம் ஆண்டுக்கு முன் மாணவர்களிடம் நேரடியாக சிறப்பு கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்த முறை ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்கான சிறப்பு கட்டணத்தை அந்த பள்ளிகளுக்கு, பள்ளி கல்வித் துறையே வழங்கும் என்று உத்தரவிட்டப்பட்டது. இதன்படி, 6 முதல் 8ம் வகுப்பிற்கு, ஒரு மாணவருக்கு ரூ.29ம்,
9-10ம் வகுப்பிற்கு ரூ. 41ம், பிளஸ்1, பிளஸ் 2வில், அறிவியல் பிரிவிற்கு ரூ.93, தொழிற்கல்விக்கு ரூ.83, கலை பிரிவிற்கு ரூ.63 என
"சிறப்பு கட்டணம்' வழங்கப்பட்டன. இதன்மூலம் பள்ளிகளில் சிறு பராமரிப்பு, மாணவர்களுக்கான மருத்துவ முகாம், சாரணர் இயக்கம், நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் என்.சி.சி., செயல்பாடுகள், ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் தயாரிப்பது போன்ற பணிகளுக்கு, இக்கட்டணத்தை தலைமையாசிரியர்கள் பயன்படுத்தினர். இக்கட்டணம், ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் வழங்கப்படும். ஆனால், இரண்டாண்டுகளாக இக்கட்டணத்தை மாணவர்களுக்கு வழங்காமல் கல்வித் துறை இழுத்தடிக்கிறது.
தலைமையாசிரியர் ஒருவர் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும், டிச., 6க்குள் மாணவர்களுக்கான சிறப்பு கட்டணத்தை, பள்ளிக் கல்வித் துறை வழங்கிவிடும். ஆனால், பல முறை அறிவுறுத்தியும் இன்னும் கிடைத்தபாடில்லை. கல்வித் துறை இயக்குனர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
அரசிடமிருந்து எப்படியும் இக்கட்டணம் வந்துவிடும் என்ற நம்பிக்கையில்,
2012-13 கல்வியாண்டில், 80 சதவீதம் பள்ளிகளில் அவசரத் தேவை கருதி ரூ.25 ஆயிரம் வரை தங்கள் சொந்த பணத்தை ஒவ்வொரு தலைமையாசிரியர்களும் செலவிட்டனர். ஆனால், இதை பெறாமலேயே கடந்த மே மாதம் 800க்கும் மேற்பட்டோர் ஓய்வு பெற்றுவிட்டனர். இந்தாண்டும் பலர் ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர். அதற்குள் சிறப்பு கட்டணம் கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
நன்றி ; தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக