உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து, முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் தேர்வு முடிவை ஒரு வாரத்தில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.
2,881 காலியிடங்கள்
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,881 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூலை மாதம் 21-ம் தேதி போட்டித்தேர்வு நடத்தப்பட்டது.
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்த தேர்வை ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரிகள் எழுதினர். விடைத்தாள் மதிப்பீட்டு பணி நடைபெற்று வந்த நிலையில், தமிழ் பாடத்தில் 40 வினாக்களுக்கு மேல் தவறாக கேட்கப்பட்டிருப்பதாகவும், எனவே முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
மறுதேர்வு உத்தரவு
தமிழ் பாடத்தில் 605 காலியிடங்களுக்கு 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதியிருந்தனர். அதில் “பி” வரிசையில் தேர்வு எழுதிய சுமார் 8 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில், தமிழ் நீங்கலாக மற்ற பாடங்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என்றும், தமிழ் பாடத்திற்கு மட்டும் மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஆசிரியர் தேர்வு வாரியம் உயர்நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தது. தவறாக கேட்கப்பட்டிருந்ததாக கூறப்படும் வினாக்கள் அனைத்தும் எழுத்துப் பிழையான வினாக்கள்தான். தேர்வர்கள் வினாக்களை புரிந்துகொள்வதில் பிரச்சினை இருந்திருக்காது. மறுதேர்வு நடத்துவதால் காலவிரையம், செலவு ஏற்படும் என்று அதில் சுட்டிக்காட்டப்பட்டது.
ஒரு வாரம்
இதற்கிடையே, தமிழ் நீங்கலாக மற்ற அனைத்து பாடங்களுக்கான தேர்வு முடிவு அக்டோபர் 7-ம் தேதி வெளியிடப்பட்டு தேர்வானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பும் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த நிலையில், மேல்முறையீட்டு வழக்கில், தமிழ் பாட தேர்வு முடிவை வெளியிடுவதற்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம், வழக்கு தொடர்ந்த மனுதாரர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கி 2 இடங்களை ஒதுக்கி வைக்குமாறும் உத்தரவிட்டது.
உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து தேர்வு முடிவை ஒரு வாரத்தில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. நீதிமன்ற உத்தரவு விவரம் திங்கள்கிழமை (16-ம் தேதி) கிடைக்கும் பட்சத்தில் வெள்ளிக்கிழமைக்குள் முடிவை வெளியிட்டுவிடுவோம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக