லேபிள்கள்

31.12.14

பள்ளி மாணவர் ஆதார் எண்ணை பெற்று பதிவு செய்யுங்கள்: தலைமை ஆசிரியர்களுக்கு கல்வி துறை உத்தரவு

'பள்ளி மாணவர்களின் ஆதார் எண்களை பெற்று, அதை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்' என, தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கடிதம்:


அனைவருக்கும் கல்வி இயக்கக, மாநில திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, சமீபத்தில் பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர்களுக்கு, கடிதம் ஒன்றை அனுப்பினார். அக்கடிதத்தில், மாணவர்கள் குறித்த தகவல்கள், ஆதார் எண் பதிவு செய்தல் குறித்து தெரிவித்திருந்தார். இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், இதுகுறித்த உத்தரவுகள், சம்பந்தப்பட்ட இயக்குனர் அலுவலகங்களில் இருந்து பிறப்பிக்கப்பட்டு உள்ளன.

* கல்வி தகவல் மேலாண்மை முறை இணையதளத்தில், 2012 - 13ம் கல்வியாண்டில் இருந்து, பள்ளிகள் விவரங்கள் அடிப்படையில், தகவல் தொகுப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. அதை சரிபார்த்து, நடப்பு கல்வியாண்டிற்கு, புதிய பள்ளிகள், விடுபட்ட பள்ளிகள் விவரங்களை பதிய வேண்டும்.

* 2014 - 15ல், ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் விவரங்களை, இணையதளத்தில் பதிவு செய்யும் பணிகளை, ஜன., 31க்குள் முடிக்க வேண்டும். அதன்பின், தலைமை ஆசிரியர்கள், மாணவர் வருகை பதிவுடன், விவரங்களை சரிபார்க்க வேண்டும். ஆய்வு அலுவலரிடமும் சமர்ப்பிக்க வேண்டும்.

* ஒன்று முதல் பிளஸ் 2 மாணவர்கள் வரை, ஆதார் எண்களை பெற்று, கல்வி தகவல் மேலாண்மை முறை இணையதளத்தில் பதிவு செய்ய, தயார் நிலையில் இருக்க வேண்டும்.

* ஒவ்வொரு பள்ளியிலும், ஆதார் எண் பெற்ற, பெறாத மாணவர்கள் எண்ணிக்கை விவரங்களை, ஆய்வு அலுவலர்கள் பெற்று, தகவல் மேலாண்மை முறை மாநில மையத்திற்கு அனுப்ப வேண்டும்.

சிறப்பு முகாம்


* அதிகளவில் ஆதார் எண் பெறாத பகுதிகளை, மாவட்ட ஆய்வு அலுவலர்கள் கண்டறிந்து, அந்த பகுதி அல்லது மண்டலங்களில், மாணவர்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தி, ஆதார் அட்டை வழங்க, மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் அனுப்ப வேண்டும்.

* மாணவர்களின் பெற்றோர் மொபைல் எண், மின் அஞ்சல் முகவரி, எடை உயரம் ஆகிய விவரங்களை பெற்று, இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். இவ்வாறு, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக