லேபிள்கள்

3.1.15

பதவி உயர்வு பெற்ற சத்துணவு ஊழியருக்கு 50 சதவீத பென்ஷன் வழங்கும் தனி நீதிபதியின் உத்தரவு ரத்து

சத்துணவுத் திட்டத்தில் பணிபுரிந்து பதவி உயர்வு மூலம் பணிவரன்முறை செய்யப்பட்டவர்கள் ஓய்வூதியப் பலன்கள் கோரியதில் 'ஏற்கனவே பணிபுரிந்ததில் 50 சதவீத பணிக்காலம் 2003 ஏப்., க்கு முன் வரன்முறை செய்யப்பட்டவர்களுக்கு கணக்கில் கொள்ளப்படும்,' என்ற அரசின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது என மதுரை ஐகோர்ட் கிளை பெஞ்ச் உத்தரவிட்டது.
மதுரை உட்பட தென் மாவட்டங்களில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் (ஐ.சி.டி.எஸ்.,) கீழ் 25 ஆண்டுகளாக தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிந்த சில சத்துணவு அமைப்பாளர்கள், குழந்தைகள் நல அலுவலர்கள் தேர்வு மூலம் ஆசிரியர்கள், கண்காணிப்பாளர்கள், ஊர்நல அலுவலர்களாக பதவி உயர்வின் மூலம் பணிவரன்முறை செய்யப்பட்டனர். இவர்கள்,'பணிவரன்முறை செய்யப்பட்ட குறுகிய காலத்தில் ஓய்வு பெற்றோம். ஏற்கனவே பணிபுரிந்த காலத்தையும் சேர்த்து ஓய்வூதிய பலன்கள் வழங்க வேண்டும்,' என அரசுக்கு விண்ணப்பித்தனர். சத்துணவு திட்டத்திலிருந்து வேறு துறைகளுக்கு மாறியவர்களுக்கு, அவர்கள் ஏற்கனவே பணிபுரிந்த காலத்தில் 50 சதவீதத்தை சேர்த்து ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்படும் என 2010 ஜன.,6 ல் தமிழக அரசு உத்தரவிட்டது. 2013 மார்ச் 14 ல் தமிழக அரசு,' 50 சதவீத பணிக்காலம் என்பது 2003 ஏப்.,1 க்கு முன் பணிவரன்முறை செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் கணக்கில் கொள்ளப்படும்,' என உத்தரவிட்டது. இதை எதிர்த்து தென் மாவட்டங்களைச் சேர்ந்த சிலர் ஐகோர்ட் கிளையில் மனு செய்தனர். 2013ல் பிறப்பித்த அரசின் உத்தரவை தனிநீதிபதி ரத்து செய்தார். இதை எதிர்த்து அரசுத் தரப்பில் மேல்முறையீடு செய்தனர். நீதிபதிகள் வி.தனபாலன், வி.எம்.வேலுமணி பெஞ்ச் விசாரித்தது. அரசுத்தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், அரசு சிறப்பு வக்கீல் பாஸ்கர பாண்டியன் ஆஜராகினர். நீதிபதிகள், '2003 ஏப்.,1 க்கு முன் பணிவரன்முறை செய்யப்பட்டவர்களுக்கு ஓய்வுக்கால பலன்களில் ஏற்கனவே பணிபுரிந்த 50 சதவீத பணிக்காலம் சேர்க்கப்படும் என 2013 ல் பிறப்பித்த அரசின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. தனிநீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுகிறது,' என்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக