லேபிள்கள்

31.12.14

மாணவியர் அதிகம் படிக்கும் பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த திட்டம்

கர்நாடகா மாநிலத்தில், மாணவியர் அதிக எண்ணிக்கையில் படிக்கும் அரசு பள்ளிகளில், கண்காணிப்பு கேமரா பொருத்த, கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது.

மாணவியரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அரசு பள்ளிகளில், கண்காணிப்பு கேமரா பொருத்த, 60 கோடி ரூபாய் வழங்கும்படி, கல்வித் துறை, கர்நாடகா அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கோரிக்கையை ஏற்ற அரசு, முதற்கட்டமாக, 5 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இந்த பணத்தில், பெங்களூருவின் 250 பள்ளிகளிலும், மாநிலத்தில் மற்ற மாவட்டங்களில், 300 அரசு பள்ளிகளில், கண்காணிப்பு கேமரா பொருத்த, கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

கர்நாடகா கல்வித் துறை கமிஷனர், முகம்மது மொஹிசின் கூறியதாவது: முதற்கட்டமாக, பெங்களூருவின், 250 அரசு பள்ளிகளில், 'சிசிடிவி' கேமரா பொருத்த, ஏற்கனவே டெண்டர் கோரப்பட்டு உள்ளது. சில வாரங்களில், டெண்டர் செயல்பாடு முடிவடையும். மாணவியர் எண்ணிக்கை அதிகமுள்ள பள்ளிகளை அடையாளம் கண்டு, 'சிசிடிவி' கேமரா பொருத்த, நடவடிக்கை எடுக்கப்படும். பின், 2ம் கட்டமாக, மற்ற மாவட்டங்களில், மாணவியர் அதிக எண்ணிக்கையில் உள்ள அரசு பள்ளிகளில், 'சிசிடிவி' கேமரா பொருத்தப்படும். அரசு பள்ளிகளில், 'சிசிடிவி' கேமரா பொருத்த, 60 கோடி ரூபாய் வழங்கும்படி, அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு ஒப்புதல் அளித்துள்ள அரசு, முதற்கட்டமாக, 5 கோடி ரூபாய் விடுவித்துள்ளது. இந்த தொகையில், 550 பள்ளிகளில், 'சிசிடிவி' கேமரா பொருத்தலாம் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. படிப்படியாக, மாநிலத்தில், அனைத்து அரசு பள்ளிகளிலும், 'சிசிடிவி' கேமரா பொருத்தப்படும். தற்போது, மாணவியர் எண்ணிக்கை அதிகமுள்ள பள்ளிகளுக்கு, முன்னுரிமை தரப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக