தமிழக போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது என்று சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் எம்.எல்.ஏ., கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் குறித்து அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதற்காத்தான் கடந்த 28ஆம் தேதியில் இருந்து வேலை நிறுத்தம் நடைபெற்றது. அந்த வேலைநிறுத்தத்தில் அனைத்து சங்கங்களையும் அழைத்து பேச வேண்டுமானால், எல்பிஎப் எங்களுக்கு ஆட்சேபனையில்லை என்று கடிதம் கொடுக்க வேண்டும் என்று அரசு கேட்ட அடிப்படையில், அந்த கடிதத்தை எல்பிஎப் நேற்று வழங்கிய பின்னர், இன்று அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு அழைத்து அடுத்த ஓரிரு நாட்களில் பேச்சுவார்த்தை கமிட்டியை நாங்கள் அமைத்து விடுகிறோம். பேச்சுவார்த்தை கமிட்டியோடு நீங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தையை நடத்தலாம் என்று அறிவித்திருக்கிறார்.
இந்த வேலைநிறுத்தத்தையொட்டி கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள். விடுதலை செய்யப்படும்போது யார் மீதேனும் கிரிமினல் வழக்குகள் இருந்தால், அந்த வழக்கில் இருப்பவர்களும் சிறையில் இருந்து வெளியே வருவதற்கு ஆவண செய்யப்படும். வழக்குகளை திரும்பப் பெறுவது குறித்து முதல் அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.
தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை இந்த அரசு எடுக்காது. சகஜ நிலைக்கு திரும்ப நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று கூறியிருக்கிறார்கள். கடந்த 26, 27 தேதிகளில் நடந்த பேச்சுவார்த்தையின்போது நாங்கள் எழுப்பிய சில கோரிக்கைகளையும் ஏற்பதாக நிர்வாகம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. அவை குறித்தும் நாங்கள் முறையான நடவடிக்கை எடுப்போம் என்று இன்று வாக்குறுதி அளித்திருக்கிறார்கள். இந்த அடிப்படையில் பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் இணங்கி வந்திருக்கின்ற சூழ்நிலையில், வேலை நிறுத்தத்தை விலக்கிக்கொள்வது என்று 11 தொழிற்சங்கங்களும் முடிவு செய்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக