லேபிள்கள்

5.4.15

தமிழகம் முழுவதும் கலந்தாய்வு : கணினி பயிற்றுனர்கள் 490 பேர் பணி நியமனம்

கணினி பயிற்றுநர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நேற்று தமிழகம்முழுவதும் நடந்தது. இதில், 490 பேருக்கு அவர்களின் சொந்த மாவட்டங்களிலேயே பணி நியமண ஆணை வழங்கப்பட்டது. இதுகுறித்து, பள்ளிக்
கல்வித்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: 
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பணிநீக்கம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட 652 கணினி பயிற்றுநர் காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்து பெறப்பட்ட தேர்வாளர்களுக்கு பணிநியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு இணையதளம் வாயிலாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் அமைந்துள்ள கலந்தாய்வு மையத்தில் நேற்று நடந்தது.இதில் 643 கணினி பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர். 

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்ட கணினி பயிற்றுநர்கள் பட்டியலில், முன்னுரிமை வாய்ந்தோர் பட்டியலில் தங்களின் பெயர் சேர்க்கப்பட வேண்டும் என்று 4 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இடைக்கால தடை ஆணை பெற்றுள்ளனர். இதன் காரணமாக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்து பெறப்பட்ட 643கணினி பயிற்றுநர்களில், முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 133 பணிநாடுநர்களுக்கு பணி நியமனத்திற்கான ஆணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பணிநாடுநர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் இறுதி தீர்ப்பில் பெறப்படும் உத்தரவின் அடிப்படையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் உறுதி செய்யப்பட்ட தேர்வுப் பட்டியல் பெறப்பட்ட பின்னரே பணிநியமன ஆணை வழங்கப்படும். மேலும், முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 133 பணிநாடுநர்களை தவிர மற்ற பணிநாடுநர்களுக்கு கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட பள்ளிக்கான பணிநியமன ஆணை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் நேற்று வழங்கப்பட்டது. 

இதில் 490 கணினி பயிற்றுநர்கள் அவரவர்களின் சொந்த மாவட்டத்திலேயே பணிநியமன ஆணை பெற்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக