லேபிள்கள்

13.7.15

பிளஸ் 1 வகுப்பில் பிளஸ் 2 பாடம் 'நோ'

பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண் பெற்றதாக காட்டுவதற்காக, பிளஸ் 1 பாடம் நடத்தாத, தனியார் பள்ளிகளில், அதிரடி ஆய்வு நடத்த பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில், அரசுப் பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பில், கண்டிப்பாக பிளஸ் 2 பாடம் நடத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டு உள்ளது.

'சென்டம்';
தமிழகத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், மாநில அளவில், 'ரேங்க்' பிடிப்பதும், 100 சதவீதம் தேர்ச்சி காட்டுவதும், அதிக மாணவர்களை, முக்கிய பாடங்களில், 'சென்டம்' எடுக்க வைப்பதும், தனியார் பள்ளிகளின் இலக்காக உள்ளது. எவ்வளவு மாணவர்கள் மாநில, 'ரேங்க்' பெறுகின்றனர்; எவ்வளவு மாணவர்கள் 'சென்டம்' வாங்குகின்றனர் என்பதற்கேற்ப, இந்த பள்ளிகள் வணிக நோக்கில், மாணவர்களிடம், பல லட்சம் ரூபாயை நன்கொடையாகவும், கட்டணமாகவும், ஒவ்வொரு ஆண்டும் வசூலிக்கின்றன.

இந்நிலையில், அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தும் வகையில், சில அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், தங்கள் பள்ளிகளில், தனியார் பள்ளிகளை போல, பிளஸ் 1 வகுப்பில், பிளஸ் 2 பாடம் நடத்த, கல்வித் துறையிடம் அனுமதி கேட்டனர்.

எச்சரிக்கை:
இதற்கு கல்வித் துறை அதிகாரிகள் அனுமதி மறுத்ததுடன், 'அனைத்து அரசு, அரசு உதவி மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளிலும், பிளஸ் 1 வகுப்பில், பிளஸ் 2 பாடங்களை நடத்தக் கூடாது' என, எச்சரித்து உள்ளனர். அத்துடன், எந்தெந்த தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பில், பிளஸ் 2 பாடம் நடத்துகின்றனர் என்பதை, ஆதாரத்துடன் கண்டறியவும்உத்தரவிடப்பட்டுள்ளது.
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மெட்ரிக் ஆய்வாளர்கள் மூலம், தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்புகளில் திடீர் ஆய்வு நடத்தவும், மாணவர்களின் நோட்டுப் புத்தகங்களை வாங்கிப் பார்த்தும், மாணவர்களிடம், பிளஸ் 1 பாடங்கள் குறித்த கேள்விகள் கேட்டும், சோதனை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. குறிப்பாக கிருஷ்ணகிரி, நாமக்கல், மதுரை மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட சில மாவட்டங்களிலுள்ள பல பள்ளிகளில், திடீர் ஆய்வு நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

அரசு பள்ளிகளுக்கு உத்தரவு:
அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம் இருந்து, நேற்று முன்தினம் சுற்றறிக்கை வந்துள்ளது. அதில், ஜூலை 15ம் தேதியை, கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடவும், மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் பெருமைகளைக் கூறும் வகையில், போட்டிகள் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக