பள்ளிக்குத் தாமதமாக வந்த மாணவர்களைத் தலைமையாசிரியர் அடித்ததாகக் கூறி, அவரை பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தி பள்ளியை பெற்றோர்கள், பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
திருப்பூர் நெசவாளர் காலனி பேருந்து நிறுத்தம் அருகே அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, திங்கள்கிழமை காலை பள்ளிக்குத் தாமதமாக வந்த 8, 9-ஆம் வகுப்பு மாணவர்கள் சிலரை தலைமையாசிரியர் அடித்ததாகக் கூறி, 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற திருப்பூர் வடக்கு போலீஸார், முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மாணவர்களைக் கடுமையாக அடித்த தலைமையாசிரியரை பணிநீக்கம் செய்ய வேண்டும். அல்லது பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தினர்.
இது தொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு) விஜயலட்சுமி, தலைமையாசிரியர், மாணவர்களிடம் விசாரணை நடத்தினார். அவர், இப்பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து, மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக