லேபிள்கள்

16.7.15

பணியிலிருந்து நீக்க முடிவு செய்தால் 3 மாதம் முன்பு நோட்டீஸ் வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

ஒருவரை பணியில் இருந்து நீக்க முடிவு செய்தால், 3 மாதத்துக்கு முன் அவருக்கு நோட்டீஸ் வழங்க வேண்டும்’ என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.திருச்சியைச் சேர்ந்தவர் முனைவர் ஏ.தண்டீஸ்வரன். திருச்சி நீர்ப்பாசன மேலாண்மை பயிற்சி நிறுவன இணை ஆராய்ச்சியாளராக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்தார். 

இவரை 12.6.2015ல் பணியில் இருந்து நீக்கியும், குடியிருப்பை காலி செய்யவும் நீர்ப்பாசன மேலாண்மைப் பயிற்சி நிறுவன இயக்குநர் உத்தரவிட்டார்.இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தண்டீஸ்வரன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். 

அந்த மனுவில், நிறுவனத்தின் ஆட்சிக் குழு ஒப்புதலின்பேரில் பணி நியமனம் செய்யப்பட்டேன். ஆனால், ஆட்சிக் குழுவின் ஒப்புதல் பெறாமல், என்னை பணிநீக்கம் செய்து இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். 

சமூகப் பொருளாதாரப் பிரிவு ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறேன். என்னை வேலையில் இருந்து நீக்கினால், அப்பிரிவு இல்லாமல் போய்விடும். என்னை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந் தது. இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ். வைத்தியநாதன் நேற்று பிறப்பித்த உத்தரவு:ஆட்சிக் குழு ஒப்புதலுடன் மனுதாரர் இணை ஆராய்ச்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். விதிப்படி ஒருவரை நியமனம் செய்யவும், பணிநீக்கம் செய்யவும் இயக்குநருக்கு அதிகாரம் உள்ளது. ஒருவரை பணியில் இருந்து நீக்க முடிவு செய்தால், 3 மாதத்துக்கு முன்பு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். ஆனால்,மனுதாரருக்கு 3 மாதத்துக்குரிய ஊதியத்தைக் கொடுத்து உடனடியாக வெளியேற்றி உள்ளனர். இது தவறு. 

ஒப்பந்தப்படி மனுதாரருக்கு 3 மாதத்துக்கு முன் நோட்டீஸ் வழங்கி சட்டப்படி பணி நீக்கம் செய்யலாம். நோட்டீஸ் வழங்காமல், உடனடியாக பணிநீக்கம் செய்வதை ஏற்க முடியாது. எனவே, மனுதாரர் 3 மாதம் வரை அதாவது 11.9.2015 வரை பணிபுரிய அனுமதிக்கவும், குடியிருப்பில் தங்கவும் அனுமதிக்க வேண்டும் என உத்தரவில் நீதிபதி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக