லேபிள்கள்

15.7.15

ஆசிரியர்கள் கலந்தாய்வு - நிபந்தனைகள், அதிருப்தியில் ஆசிரியர்கள்

ஒரே பள்ளியில் மூன்று கல்வியாண்டுகள் பணிபுரிந்திருந்தால் மட்டுமே இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க முடியும் என ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை புதிய நிபந்தனை விதித்துள்ளது. 

பார்வையற்றவர்கள், 40 சதவீதத்துக்கும் மேல் உடல் ஊனமுள்ள மாற்றுத்திறனாளிகள், ராணுவத்தில் பணிபுரிபவரின் மனைவி, இதயம், சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்டவர்கள், புற்றுநோயாளிகள் உள்ளிட்டோருக்கு இந்த நிபந்தனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா வெளியிட்டுள்ளார். 

இதில், பணியிட மாறுதல் கோருவதற்காக குறைந்தபட்சம் ஓராண்டு பணியாற்றியிருக்க வேண்டும் என்பதை, மூன்று ஆண்டுகள் அல்லது அதற்குமேல் பணியாற்றியிருக்க வேண்டும் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, தற்போது பணிபுரியும் பள்ளியில் 01.06.2012-க்கு முன்னதாக பணியில் சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான பணியிடங்கள் உபரியாக உள்ளன. எனவே, பணி நிரவலுக்குப் பிறகே பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்படும். 

அதுவரை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாறுதல் வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நெறிமுறைகளில் உள்ள முக்கிய அம்சங்களின் விவரம்:- பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் கடந்த ஆண்டுகளில் பள்ளிகளுக்கு தொடர்ந்து ஆசிரியர்கள் நேரடி நியமனம் செய்யப்பட்டனர். இப்போது ஆசிரியர் பணியிடங்களை பணி நிரவல் செய்ய வேண்டும் என நிதித் துறை அறிவுறுத்தியுள்ளது. இந்தக் காரணங்களுக்காக, 2015-16-ஆம் கல்வியாண்டில் தொடக்கக் கல்வித் துறையிலிருந்து, பள்ளிக் கல்வித் துறைக்கு இந்த ஆண்டு அலகுவிட்டு அலகு மாறுதல், ஆசிரியர் மாறுதல் தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது. 

இதேபோன்று, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை, கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகளிலிருந்து பள்ளிக் கல்வித் துறைக்கு மாறுதல் வழங்குவதும் தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது. தொடக்கக் கல்வித் துறை, பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் மாநகராட்சிப் பள்ளிகளுக்கு மாறுதல் பெற அனுமதிக்கப்பட வேண்டும். விதிகளில் மாற்றம்:- அரசு மகளிர் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களில் பெண் ஆசிரியர், பெண் தலைமையாசிரியர்களை நியமிக்க வேண்டும். ஆண்கள் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆண் ஆசிரியர், ஆண் தலைமையாசிரியர்களை நியமிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. 

இப்போது, ஆசிரியர்கள் தேவைக்கேற்ப இல்லையென்றால், அரசு மகளிர் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆண் ஆசிரியர்களை நியமிக்கலாம் எனத் திருத்தப்பட்டுள்ளது. அதேபோல், ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் தேவைக்கேற்ப ஆசிரியர்கள் இல்லையென்றால் பெண் ஆசிரியர்களை நியமிக்கலாம் என திருத்தப்பட்டுள்ளது. இருபாலர் பயிலும் பள்ளிகளில் பொதுமாறுதல் விதிகளின்படி, ஆண், பெண் தலைமையாசிரியர்களை நியமிக்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக