லேபிள்கள்

9.10.15

எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களிடம்10 ஆண்டுகளாக வசூலித்த பணம்: ஆர்.டி.ஓ., சமரசத்தில் திருப்பி தர முடிவு

:திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம பல்கலையில் கடந்த 10 ஆண்டுகளாக எஸ்.சி., எஸ்.டி, மாணவர்கள் 4194 பேரிடம் வசூலித்த கல்வி கட்டணத்தை திருப்பித்தர பல்கலை நிர்வாகம் ஆர்.டி.ஓ., பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொண்டுள்ளது.

காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் பல்கலைக்கழகம். இங்கு பயிலும் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களிடம் கல்விக்கட்டணம் உட்பட எந்த கட்டணமும் வசூலிக்க கூடாது என்று அரசாணை உள்ளது.அதற்கான தொகையை அரசே வழங்கிவிடும். அரசு வழங்காததால் அத்தொகை மாணவர்களுக்கு வழங்க இயலவில்லை. எனவே எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களிடம் கடந்த 2006 முதல் கல்விகட்டணம் உட்பட பல கட்டணங்களை பல்கலை நிர்வாகம் வசூலித்துள்ளது. இதை திருப்பித்தரக்கோரி பல அமைப்புகள் காந்தி கிராம பல்கலையை முற்றுகையிட முடிவு செய்தன.
ஆர்.டி.ஓ., பேச்சுவார்த்தை: இது தொடர்பாக திண்டுக்கல் ஆர்.டி.ஓ.,மனோகரன் தலைமையில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. இதில் பல்கலை தரப்பில் இட ஒதுக்கீடு பொறுப்பு அதிகாரி ஆனந்தக்குமார், சிறப்பு 
அதிகாரி ஆனந்தராஜ், தலித் விடுதலை இயக்க மாநில இணை பொது செயலாளர் கருப்பையா, தலித் அமைப்பை சேர்ந்த காமாட்சி, ராஜகோபால் பங்கேற்றனர்.
இதில் காந்திகிராம பல்கலைக்கழகம் எஸ்.சி., எஸ்.டி.,மாணவர்கள் 4194 பேரிடம் வசூலித்த கல்வி கட்டணத்தை திருப்பித்தருவது, படிப்பை முடித்துச் சென்ற மாணவர்களுக்கு போஸ்ட் கார்டு, அலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கவும், அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைப்பது என்றும் பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.
கருப்பையா கூறுகையில், “பல்கலைக்கழகம் கட்டணத்தை திருப்பித்தருவதாக ஒத்துக் கொண்டதால் போராட்டத்தை கைவிட்டுவிட்டோம், என்றார்.
ஆர்.டி.ஓ., மனோகரன் கூறியதாவது: அரசாணை உத்தரவில் சில இடங்களில் குழப்பமான வார்த்தைகள் வந்ததால், பேராசிரியர்கள் சந்தேகத்துடனே வசூலித்துள்ளனர். கல்வி கட்டணம் உட்பட அனைத்து கட்டணத்தையும் திருப்பித்தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக