லேபிள்கள்

8.10.15

தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் இன்று வேலைநிறுத்தம்

தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் வியாழக்கிழமை (அக்டோபர் 8) வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.மாநிலம் முழுவதும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட
ஆசிரியர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் (ஜேக்டோ) பிரதிநிதிகள் தெரிவித்தனர்.


மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 14 நலத்திட்ட உதவிகளை வழங்கத் தனி அலுவலரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேக்டோ) சார்பில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்பட பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.இதையடுத்து, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட ஜேக்டோ உயர்நிலைக் குழு முடிவு எடுத்தது. பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் ஆகியோர் ஜேக்டோ உயர்நிலைக் குழுவினருடன் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இதில் எந்த முடிவும் எட்டப்படாததால் திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என ஜேக்டோநிர்வாகிகள் அறிவித்தனர்.

இது தொடர்பாக ஜேக்டோவின் மாநிலத் தொடர்பாளர் இளங்கோவன், உயர்நிலைக் குழு உறுப்பினர் சாமி.சத்தியமூர்த்தி ஆகியோர் கூறியதாவது:ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு புதன்கிழமை அழைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. எனவே, திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் 11 மணி வரை ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

இணை இயக்குநர்கள் கண்காணிப்பு: 

ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதையொட்டி, பள்ளிகள் வியாழக்கிழமை வழக்கம்போல் செயல்படுவதை உறுதிசெய்யபள்ளிக் கல்வி இணை இயக்குநர்கள் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். பள்ளிகள் சுமுகமாகச் செயல்படுவதை இணை இயக்குநர்கள் உறுதி செய்வர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக