லேபிள்கள்

16.11.15

மழையால் பாதித்த வகுப்பறைகளை பயன்படுத்த வேண்டாம்: தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித் துறை அறிவுறுத்தல்

மழையால் பாதிக்கப்பட்ட வகுப்பறைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக மாவட்டங்களில் உள்ள கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் ஞாயிற்றுக்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:-

வட கிழக்குப் பருவமழை காரணமாக, அடுத்துவரும் நாள்களிலும் தொடர் மழை எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மாணவர்களின் பாதுகாப்புக்காக ஆய்வு அலுவலர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதற்காக சில அறிவுரைகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.
தொடர் மழையால் மிகுந்த ஈரத்துடன் இருக்கும் பள்ளியின் சுற்றுச்சுவர்களில் இருந்து 20 அடி தொலைவு வரை மாணவர்கள் அருகில் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும். 
பாதிக்கப்பட்ட வகுப்பறைகளை பயன்படுத்தாமல், பாதுகாப்பாக பூட்டி வைக்க வேண்டும்.
மின் கசிவு, மின் கோளாறுகள் ஏதேனும் உள்ளனவா என்று ஆய்வு செய்ய வேண்டும். 
தேவையெனில், மின் இணைப்பைத் தாற்காலிகமாகத் துண்டிக்க வேண்டும்.
ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது அந்த வழிகளைத் தவிர்க்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். விழும் நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
மழையில் காத்துக்கொள்ள மாணவர்கள் மரங்களின் கீழ் ஒதுங்குவது கூடாது என்றும், இடி, மின்னல் ஆபத்துகள் குறித்தும் அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
நோய்களிலிருந்து மாணவர்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரைகளையும் வழங்க வேண்டும். 
பள்ளி வளாகத்துக்குள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், அனைத்து நடவடிக்கைகளையும் தலைமையாசிரியரால் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்த அறிவுரைகளை தலைமையாசிரியர்கள் பின்பற்றுவதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக