லேபிள்கள்

29.4.16

கோவையில் 2-வது முறையாக வெளியானது 5-ம் வகுப்பு வினாத் தாள்: தேர்வுத் துறை இயக்குநரிடம் புகார்.

கோவை மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் தயாரான 5-ம் வகுப்பு பருவத் தேர்வு வினாத் தாள்கள் மீண்டும் வெளியாகியுள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.
இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.தமிழகத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டுக்கான மூன்றாம் பருவத் தேர்வு கடந்த 21-ம் தேதி தொடங்கியது.


30-ம் தேதிக்குள் இத் தேர்வை நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, தொடக்கப் பள்ளிகளில் ஏப்.29-ம் தேதிக்குள்ளும், நடுநிலைப் பள்ளிகளில் 30-ம் தேதிக்குள்ளும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 3,5,6,7,8 ஆகிய வகுப்புகளுக்கான தேர்வு வினாத் தாள்கள், பள்ளிக் கல்வித் துறை மூலம் அச்சிடப்பட்டு, அனைத்துப் பள்ளிகளுக்கும் விநியோகிக்கப்பட்டது.இந் நிலையில், தேர்வு தொடங்கும் முன்பாகவே (கடந்த 19-ம் தேதி) 5-ம் வகுப்புக்கான வினாத் தாள்கள் வெளியாகின. தனியார் ஜெராக்ஸ் கடைகளில் விலை வைத்து விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் எழுந்தது.தொடக்கக் கல்வித் துறையால் தயாரிக்கப்பட்டு, உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட வினாத் தாள் பிரதிகள் வெளியாகி, விற்பனை செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படுவதாக கோவை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் காந்திமதி தெரிவித்திருந்தார்.இந் நிலையில், 5-ம் வகுப்பின் அனைத்து வினாத் தாள்களுமே தேர்வுக்கு முந்தைய தினங்களில் வெளியாகி, விற்பனையாகி வருவது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்

இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலை ஆசிரியர் நலச் சங்கத்தினர் தேர்வுத் துறை இயக்குநருக்கு புகார் அளித்துள்ளனர்.சங்கத் தலைவர் ராஜ்குமார் கூறும்போது, ‘ஆண்டு இறுதி தேர்வு வினாத் தாள்களுக்கு மாணவர்களிடம் ரூ.30, ரூ.40என வசூலித்துள்ளனர்.இதற்கு ரசீது எதுவும் தரப்படவில்லை. கணக்குத் தணிக்கையிலும் இத்தொகை காட்டப்படவில்லை. ஒவ்வொரு வருடமும் இதுபோன்ற புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. 

தொடக்கக் கல்வி தேர்வுகளும் அரசுத் தேர்வுகள் என்பதால் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரை நியமிக்க வேண்டும். ஆரம்பநிலை கல்வியிலேயே மாணவர்களை தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் வகையில் இந்த சம்பவங்கள் நடக்கின்றன. இதுதொடரும் பட்சத்தில், மாணவர்களின் மேல்நிலைக் கல்வி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. வினாத்தாள் வெளியான விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அலுவலர் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்வுத்துறை இயக்குநரை வலியுறுத்தியுள்ளோம்’ என்றார்.வினாத்தாள் தயாரிப்புக்காக பெறப்படும் தொகையில் பெரும் முறைகேடு ஏற்பட்டுள்ளதாக தொடக்கக் கல்வி அனைத்து ஆசிரியர் சங்கங்களின் பொறுப்பாளர்கள் புகார்தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக