லேபிள்கள்

29.4.16

பிஎப்புக்கு 8.7% வட்டி தரக்கூட நிதியே இல்லை: நிதியமைச்சகம் திடீர் விளக்கம்

பிஎப்புக்கு 8.7 சதவீத வட்டி வழங்கக்கூட நிதியில்லை என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்களுக்கு 2015-16 நிதியாண்டுக்கான வட்டியாக 8.8 சதவீதம் அளிக்க வேண்டும் மத்திய அறக்கட்டளை வாரியம் பரிந்துரை செய்திருந்தது. ஆனால் நிதியமைச்சகம் 8.7 சதவீதம் வழங்க ஒப்புதல் அளித்தது.

பிஎப் நிறுவனம் கடந்த 2013-14 மற்றும் 2014-15 நிதியாண்டுகளுக்கான வட்டியாக 8.75 சதவீதம் வழங்கியது. இது 2012-13 நிதியாண்டில் 8.5 சதவீதமாகவும், 2011-12 நிதியாண்டில் 8.25 சதவீதமாகவும் இருந்தது. இதற்கு முன்பு கால் சதவீதம் அளவுக்கு வட்டி உயர்த்தப்பட்டது. அதோடு கடந்த பிப்ரவரி 16ம் தேதி 2015-16க்கான இடைக்கால பிஎப் வட்டி விகிதமாக 8.8 சதவீதமாக முடிவு செய்யப்பட்டது. இந்த இடைக்கால வட்டியை கூட தர மறுத்துள்ளது நிதியமைச்சகம். இந்த முடிவுக்கு தொழிற்சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்தன.
அதோடு, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் நாளை ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளன. இதற்கிடையில், வட்டி குறைத்ததற்கு நிதி பற்றாக்குறையே காரணம் என நிதியமைச்சகம் கூறியுள்ளது. இதுகுறித்து நிதியமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:கடந்த 2014-15 நிதியாண்டில் பிஎப் நிதி முதலீடு மூலம் கிடைத்த வருவாய் ரூ.1,604.05 கோடி உபரி இருந்தது. தற்போது 8.8 சதவீத வட்டி அளித்தால் இந்த உபரித்தொகை ரூ.673.85 கோடியாக குறைந்து விடும். இதே நிலை நீடித்தால் அடுத்த ஆண்டு இந்த அளவுக்கு கூட நிலையான வட்டி கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடும். 8.7 சதவீதம் கொடுத்தால் இந்த உபரி ரூ.1,000 கோடியாக இருக்கும்.
ஆனால் இதை தரக்கூட போதுமான நிதியில்லை. அதுமட்டுமின்றி, செயல்படாத 9 கோடி பிஎப் கணக்குகளில் உள்ள ரூ.35,000 கோடிக்கு மேற்பட்ட மூலனத தொகையில் கிடைத்த வட்டி வருவாய் மத்திய அறக்கட்டளை குழு முடிவின்படி தற்போது செயல்பாட்டில் உள்ள கணக்குகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக