தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், தனியார் பள்ளிகளில் ஏப்ரல் 22-ஆம் தேதியில் இருந்து சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டிருந்த நிலையில், கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே வெயில் கடுமையாக உள்ளது. கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 10 நாள்களாக வெயில் 100 டிகிரிக்கு மேல் உள்ளது. வெயிலுக்குப் பயந்து பெரியவர்கள்கூட வீடுகளில் முடங்கி உள்ளனர்.
தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே வெயில் கடுமையாக உள்ளது. கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 10 நாள்களாக வெயில் 100 டிகிரிக்கு மேல் உள்ளது. வெயிலுக்குப் பயந்து பெரியவர்கள்கூட வீடுகளில் முடங்கி உள்ளனர்.
மின்விசிறி, குளிர்சாதன வசதி இருந்தாலும், பகல் வேளையில் வெயிலின் தாக்கம் பலரை பாதிப்புக்கு ஆளாக்கியுள்ளது.
வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து, மே மாதத்தில் இருந்து 110 டிகிரி வரை உயரலாம் என்ற தகவல் மக்களை அச்சுறுத்தி வருகிறது.
வெயிலின் கடுமையை உணர்ந்த தமிழக கல்வித் துறை, தனியார் பள்ளிகள் ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று அறிவுறுத்தியிருந்தது. இதை மீறும் பள்ளி நிர்வாகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.
ஆனால், கல்வித் துறையின் அறிவுறுத்தலை மீறி, கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. உதாரணமாக, கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள செயின்ட் மேரீஸ் மெட்ரிக். பள்ளியில் ஏப்ரல் 15-ஆம் தேதியே தேர்வுகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், கல்வித் துறையின் உத்தரவை அடுத்து, பள்ளி நிர்வாகம் மாணவர்களை அவர்களது பெற்றோரிடம் எங்கள் பிள்ளையை சிறப்பு வகுப்புக்கு அனுப்பச் சம்மதிக்கிறோம் என ஒப்புதல் கடிதம் வாங்கி வருமாறு நிர்பந்திப்பதாகக் கூறப்படுகிறது.
இதேபோல, கும்மிடிப்பூண்டி பஜார், சிந்தலக்குப்பம், சிறுபுழல்பேட்டை, கவரப்பேட்டை, பெரியபாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் செயல்படும் தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தனியார் பள்ளிகளில் கடந்த ஜனவரி மாதம் முதலே 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு பாடங்களும், பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு பிளஸ் 2 வகுப்பு பாடங்களும் நடத்தப்பட்டு வருவதாக மாணவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், தற்போது கடும் வெயிலின் தாக்கத்திலும் தனியார் பள்ளிகள் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களை சிறப்பு வகுப்பு என்ற பெயரில் சிரமப்படுத்துவதை அரசு தடுக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக