லேபிள்கள்

11.6.16

எழுத, படிக்க தெரியாவிட்டால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

 கல்வித்துறை அலுவலர்களின் ஆய்வின்போது, மாணவர்களுக்கு எழுத, படிக்க தெரியவில்லை என்றால், கண்டிப்பாக, ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என, பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் பாலமுருகன் பேசினார்.சேலம் மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், 90 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி விகிதம் பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனைக்கூட்டம், சேலம் ஹோலிகிராஸ் மெட்ரிக் பள்ளியில், நேற்று நடந்தது.அதில், இணை இயக்குனர் பாலமுருகன் பேசியதாவது: ஒவ்வொரு தலைமை ஆசிரியரும், சமுதாய நோக்கத்துடன் பள்ளி வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். தரமான கல்வி வழங்குவது மட்டுமே நோக்கமாக இருக்க வேண்டும். மாணவர்களில் மூன்று வகை உண்டு. நன்றாக படிப்பவர், சுமாராக படிப்பவர், கற்றலில் பின்தங்கியவர். அதில், கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு, சற்றுகூடுதல் கவனம் செலுத்தி கற்றுக்கொடுத்தாலே, தேர்ச்சி விகிதத்தை, 100 சதவீதமாக்கிவிடலாம்.
ஆறு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களிடம் ஆசிரியர்கள் தனிப்பட்ட அக்கறை காட்டினால் மட்டுமே மாற்றங்கள் ஏற்படும். ஆசிரியர்கள் சரியாக இல்லாவிட்டால் தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். படிப்பில் ஆர்வம் இல்லாத மாணவர்களுக்கு, உரிய கவுன்சிலிங் வழங்க வேண்டும். கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு கூடுதல் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும். 6 முதல், 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். கல்வித்துறை அலுவலர்களின் ஆய்வின்போது, மாணவர்களுக்கு எழுத, படிக்க தெரியவில்லை என்றால், கண்டிப்பாக ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக