லேபிள்கள்

6.6.16

பொதுத் தேர்வில் குறைவான தேர்ச்சி விகிதம் ஏன்? ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க சி.இ.ஓ., உத்தரவு.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில், 75 சதவீதத்துக்கும்
குறைவான தேர்ச்சிக்கு காரணமான ஆசிரியர்கள், விளக்கம் அளிக்க வேண்டும் என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொன்.குமார் உத்தரவிட்டுள்ளார்.

பிளஸ் 2 தேர்வு முடிவு கடந்த மாதம், 17ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு கடந்த மாதம், 25ம் தேதியும் வெளியானது. இதில், திருவண்ணாமலை மாவட்டம், பிளஸ் 2 தேர்வில், 90 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநில அளவில், 21வது இடத்தையும், பத்தாம் வகுப்பு தேர்வில், 89 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநில அளவில், 29வது இடத்தையும் பிடித்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் அதிகரித்திருந்தாலும், எதிர்பார்த்த அளவில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் உயரவில்லை. குறிப்பாக, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், மாநில அளவில், 20 இடங்களுக்குள் இடம்பெற மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை. இதையடுத்து, பொதுத்தேர்வில்,75 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி பெற்ற பாடப்பிரிவு ஆசிரியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 

இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆசிரியர்கள், தங்களுடைய பாடங்களில் தேர்ச்சி குறைந்ததற்கான காரணம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன்.குமார் உத்தரவிட்டுள்ளார். ஆசிரியர்கள் அளிக்கும்விளக்கங்களின் அடிப்படையில், நடப்பு கல்வி ஆண்டில் தேர்ச்சியை மேலும் அதிகரிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தேர்ச்சி குறைந்த பாடங்களின் ஆசிரியர்களுக்கு, புத்தாக்க பயிற்சி முகாம் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக