லேபிள்கள்

26.7.16

விடைத்தாளில் 'கோட்டை விட்ட' ஆசிரியர்கள் : தேர்வுத்துறை 'நோட்டீஸ்'

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் அதிக மதிப்பெண் வித்தியாசம் ஏற்பட்ட, எட்டு மாவட்ட ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு தேர்வுத்துறை 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச்சில் நடந்தது. ஏப்ரல் கடைசி வாரம் முதல் மே 10 வரை விடைத்தாள் திருத்தும் முகாம்கள் நடந்தன. தேர்வு முடிவுகளுக்குப்பின் மறுகூட்டல், விடைத்தாள் நகல் வழங்கும் பணிகள் நடந்தன. சில மாவட்டங்களில் மறுகூட்டல் செய்யப்பட்ட, விடைத்தாள்களில் ஒன்று முதல் 10 மதிப்பெண் வரை வித்தியாசம் ஏற்படும். கடந்த ஆண்டு 25 மதிப்பெண் வரை வித்தியாசம் இருந்தது. 

ஆனால் இந்த ஆண்டு 75 மதிப்பெண் வரை வித்தியாசம் ஏற்பட்டதால் தேர்வுத்துறை அதிர்ச்சி அடைந்தது. நோட்டீஸ்: கோவை, திண்டுக்கல், ஊட்டி, திருப்பூர் உட்பட எட்டு மாவட்டங்களில் மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாளில், அதிக எண்ணிக்கையில் மதிப்பெண் வித்தியாசம் ஏற்பட்டது ஆய்வில் தெரிந்தது. அந்த மாவட்டங்களில் திருத்தும் பணியில் ஈடுபட்ட முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வாளர்கள், உதவி தேர்வாளர்கள், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு தேர்வுத் துறை 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. 

கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மறுகூட்டலின் போது மொத்த மதிப்பெண் கணக்கிடல், பக்கம் வாரியாக மதிப்பெண் எடுத்து எழுதுவதில் ஏற்படும் கவனக்குறைவால் வித்தியாசம் ஏற்படுவது வழக்கம்தான். ஆனால் தற்போது அதிகபட்சம் 75 மதிப்பெண் வரை வித்தியாசம் இருந்தது. இது, விடைத்தாளின் ஒரு சில பக்கம் திருத்தாமல் விடுபட்டது அல்லது மதிப்பெண் எடுத்து எழுதியதில் எண்களை மாற்றி எழுதியதால் வித்தியாசம் ஏற்பட்டிருக்கலாம். அதிக வித்தியாசம் ஏற்பட்ட எட்டு மாவட்ட ஆசிரியர்களுக்கு 'நோட்டீஸ்' அனுப்பி வரும் 27ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது, என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக