லேபிள்கள்

28.7.16

உதயமானது... *கல்வி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு*

இந்திய அரசு புதிய கல்விக்கொள்கை உருவாக்கத்திற்காக, பொதுப் பட்டியலில் உள்ள கல்வி தொடர்பான கொள்கை முடிவுகளை
மாநில அரசுகளைக் கலந்தாலோசிக்காமல் மேற்கொள்ளுதல், பள்ளிக்கல்வியில் உள்ள சிக்கல்களை வெறும் நிர்வாகச் சிக்கல்களாக கருதி அதற்கு தகவல் தொழில்நுட்ப மேலாண்மையை மட்டுமே நம்பி சரி செய்ய முயற்சித்தல் மற்றும் ஆசிரியர், மாணவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துதல், உயர்கல்வி முற்றிலும் தனியார்மயம், சமஸ்கிருத திணிப்பு உள்ளிட்ட வகுப்புவாத அபாயம் போன்ற பல்வேறு அபாயங்கள் இந்திய கல்வி முறையைச் சூழ்ந்திருக்கின்றன.. எனவே இந்தியக் கல்வி நலனில் அக்கறை உள்ள ஒவ்வொருவரும் இத்தகைய அபாயங்களை தடுத்து நிறுத்திட வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறோம்.


எனவே தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் புதிய கல்விக் கொள்கை தொடர்பான கூட்டியக்கத்திற்கான ஆலோசனைக்கூட்டம் ஜூலை 24 அன்று சென்னை அரசு கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தில் நடைபெற்றது.. மூட்டா, தமிழ்நாடு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம், தனியார் பள்ளி ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் , உடற்கல்வி இயக்குநர் சங்கம், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு தொடக்க, நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை, தமிழக ஆரம்ப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம், இந்திய மாணவர் சங்கம், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம், உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்..


ஆலோசனைக் கூட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர், கல்விச் செயல்பாட்டாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய கல்வி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு – தமிழ்நாடு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது..


இக்கூட்டமைப்பில் 25 அமைப்புகள் இணைந்துள்ளன. இக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளராக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சார்ந்த பேரா.நா.மணி செயல்படுவது என்றும் நிதிக் காப்பாளராக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ச.மோசஸ் அவர்கள் செயல்படுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இணைந்துள்ள அனைத்துச் சங்கங்களின் மாநிலத் தலைவர்கள் மற்றும் பொதுச்செயலாளர்களைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு, தலைசிறந்த கல்வியாளர்களைக் கொண்ட ஒரு ஆலோசனைக் குழு உருவாக்கிக் கொண்டு இக்கூட்டமைப்பு தொடர்ந்து செயல்படுவதெனவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.


கல்வி நலனைப் பாதுகாத்தல் என்ற பொதுநோக்கத்தின் அடிப்படையில் இணைந்து கொள்ள விரும்பும் அமைப்புகளையும் இணைத்துக்கொள்வது தக்க தலையீடுகளைச் செய்து மக்களுக்கான கல்விக்கொள்கை உருவாக்கப் பாடுபடுவது எனவும் எதிர்காலத்தில் தேசிய, மாநில அளவுகளில் கல்வி சார்ந்த பிரச்சனைகளுக்காக இக்கூட்டமைப்பு ஒன்றிணைந்து தொடர்ந்து செயல்படுவது எனவும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.. மேலும் ஜூலை 30 அன்று சென்னை லயோலா கல்லூரியில் ஆயிரம் பேர் பங்குபெறும் மாநில அளவிலான மாபெரும் கருத்தரங்கு ஒன்றை  நடத்திடவும் மத்திய அரசு இப்பிரச்சனையில் செவிசாய்க்காவிட்டால் இதன் பாதக விளைவுகளை ஆசிரியர், மாணவர், பொதுமக்கள் என்று அனைத்து தரப்பினரிடமும் எடுத்துச் செல்வது, ஆகஸ்ட் முதல் வாரம் தொடங்கி மாநிலம் முழுவதும் ஆறு மண்டலங்களாகப் பிரித்து வேன் பிரச்சார இயக்கம் மேற்கொள்வது, பிரச்சார இயக்கத்தின் நிறைவாக திருச்சியில் செப்.5 ஆம் தேதி ஆசிரியர் தினத்தன்று குறைந்தபட்சம் 3000 பேர் பங்குபெறும் மாபெரும் மாநாட்டை நடத்துவது எனவும் இக்கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் சந்தித்து புதிய கல்விக் கொள்கை தொடர்பான பாதகமான அம்சங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வலியுறுத்துவது எனவும் முடிவாக்கப்பட்டுள்ளது.


ஆலோசனைக் கூட்ட முடிவின் படி ஜூலை 25 அன்று சென்னை இக்சா மையத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.. கூட்டமைப்பின் சார்பில், மத்திய மாநில அரசுகளுக்கு கீழ்க்காணும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன..

 மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை டி.எஸ்.ஆர் சுப்ரமணியம் கல்விக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் தயாரித்ததாக நம்பப்படும்  புதிய கல்விக் கொள்கை உருவாக்கத்திற்கான சில உள்ளீடுகள் என்ற ஆவணத்தை தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியிட வேண்டும்.

கருத்துக் கூறுவதற்காக மூன்று மாத கால அவகாசம் தரப்பட வேண்டும். அனைத்து இந்தியக் குடிமக்களும் தங்கள் தாய்மொழியில் கருத்துகளைப் பதிவு செய்ய வழிவகைகள் செய்யப்பட வேண்டும்.


தற்போதைய கல்விக்கொள்கை உருவாக்கத்திற்கான நடைமுறைகள் இந்திய கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது. எனவே, புதிய கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கையை தயாரிக்க அனைத்து மாநிலங்களையும் பட்டியலினத்தவர், பழங்குடியினர், சிறுபான்மையினர் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களின் கருத்துகளையும் பிரதிபலிக்கக் கூடியதாக புதிய வரைவுக் குழு உருவாக்கப்பட வேண்டும்.


மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை ஆவணம் மாநில அரசுகளுக்கும் கருத்துக் கூறும்படி அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. தமிழக அரசு அதன் மீது கருத்து தெரிவித்து இருந்தால் அதை தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஒருவேளை கருத்து தெரிவிக்காமல் இருந்தால் தமிழகக் கல்வியாளர்கள், ஆசிரியர், மாணவர் சங்கங்கள் ஆகியவற்றைக் கலந்தாலோசித்து அதன்பிறகு மாநில அரசு தனது கருத்துகளை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.



தமிழ்நாடு சட்டசபைக் கூட்டம் நடைபெற்று வரும் இந்தச் சூழலில் புதிய கல்விக் கொள்கை உருவாக்கத்தின் மீதான இந்தப் பிரச்சனைகளை முக்கிய விவாதப் பொருளாக எடுத்துக் கொண்டு விவாதித்து தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்ற வகையில் மாநில உரிமைகளை பாதுகாக்கத் தக்க வகையிலும் முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் கல்வி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.


பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கல்வி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பி ஒருங்கிணைப்பாளர் பேரா.என்.மணி, நிதிக்காப்பாளர் ச.மோசஸ், மூட்டா அமைப்பிலிருந்து விவேகானந்தன், பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பிரின்ஸ் கஜேந்திர பாபு, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் நிறுவனத்தலைவர் மாயவன், மாநிலத் தலைவர் பக்தவச்சலம், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் கே.பி.ஓ.சுரேஷ், பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் பேட்ரிக் ரைமெண்ட், ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தின் புலவர் இராமலிங்கம், தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் பூபாலன், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் தாஸ், இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர் மாரியப்பன் உள்ளிட்ட பல அமைப்புகளின் நிர்வாகிகளும் பெரும்பாலான ஊடக நண்பர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக