லேபிள்கள்

6.9.16

கல்வித்தரத்தை உயர்த்த காத்திருக்கும் சவால்கள் : ஆசிரியர் தின விழாவில் பட்டியலிட்ட அமைச்சர்

சென்னை: கல்வித்தரத்தை உயர்த்துவதற்கான சவால்களை ஆசிரியர்கள் எப்படி சமாளிக்க வேண்டும் என, பள்ளிக்கல்வி அமைச்சர் பாண்டியராஜன்,
14 கட்டளைகளை பிறப்பித்தார். ஆசிரியர் தின விழாவில் அவரது பேச்சு, அதிகாரிகளை அசர வைத்தது.

தமிழக அரசின் சார்பில், ஆசிரியர் தின விழா நேற்று, சென்னை, சாந்தோம் செயின்ட் பீட்ஸ் பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளிக்கல்வி அமைச்சர் பாண்டியராஜன், 379 ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தின விருதுகளை வழங்கி
பேசியதாவது: இந்தியாவில், தமிழகம் மட்டுமே கல்வித்துறையில் அதிக சாதனைகளை படைத்துள்ளது. அமெரிக்காவை விட அதிக விகிதத்தில், தமிழக மாணவர்கள் கல்லுாரி கல்வியில் சேர்கின்றனர். பள்ளிக்கல்வியை சர்வதேச அளவில் தரம் உயர்த்த, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஆசிரியர்களுக்கு தொழில்நுட்ப வளர்ச்சி, போட்டித் தேர்வுகள் போன்றவற்றை சமாளிக்க சவால்கள் காத்திருக்கின்றன.

● இணையதளத்திலும் மாறி வரும் தொழில்நுட்பம் அடிப்படையிலும், ஆசிரியர்கள் தங்களை தரம் உயர்த்திக் கொள்ள, உயர் தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள வேண்டும்
மதிநுட்பம் மிகுந்துள்ள மாணவர்கள், வெறும் மாணவர்களாக அல்லாமல் நண்பர்களாக கற்றுக்கொள்ள ஆசைப்படுகின்றனர்; அதற்கேற்ப, ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்க தயாராக வேண்டும்
● கடைசி பெஞ்ச் மாணவர்களையும் முன்னேற்றும் அளவுக்கு, திட்டமிட்டு கற்றுக்கொடுக்க வேண்டும்
அரசின் கொள்கைகளை, திட்டங்களை, செயல்பாடுகளை எப்படி அணுகுவது; எதிர்ப்புகளை குறைத்து கொள்வது; அரசுடன் இணைந்து செயல்படுவது என மாற வேண்டும்
ஆசிரியர்கள் ஒருவருக்கொருவர் சண்டை, சச்சரவு, பொறாமை போன்ற எண்ணங்களை வளர்க்காமல், ஒருவருக்கொருவர் குறை சொல்லாமல் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்
புதிய கல்விக்கொள்கை வந்துள்ளது; அதை எப்படி அணுகுவது என, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தெரியும். அதேநேரம், தங்கள் கருத்துகளை அரசுக்கு தெரிவித்து, நாட்டின் உயர்வுடன் இணைந்து செயல்பட வேண்டும்
●  மாணவர்களின் படைப்புத்திறனை மதித்து வழி நடத்த வேண்டும். போட்டித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் போன்ற சவால்களை சமாளிக்க, பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டு வர உதவ வேண்டும்
தொழிற்கல்வியில், திறன் வளர்ப்பு பயிற்சிகளில் மாணவர்களை சிறப்பாக உருவாக்க வேண்டும்.
இந்த சவால்களை படிக்கட்டுகளாக மாற்றி, முதல்வரின் கனவுப்படி, தமிழக பள்ளிக்கல்வியை சர்வதேச அளவில் உயர்ந்த தரத்திற்கு மாற்ற, ஆசிரியர்களும், நிர்வாகத்தினரும் முன் வாருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
ஆங்கிலமும், தமிழும் கலந்த அமைச்சரின் பேச்சு, ஆசிரியர்கள், அதிகாரிகள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளை அசர வைத்தது.

பள்ளிக்கல்வித் துறை செயலர் சபிதா, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி மற்றும் பாடநுால் கழக மேலாண் இயக்குனர் மைதிலி ராஜேந்திரனும், அமைச்சரின் பேச்சை கண் இமைக்காமல் கவனித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக