வசதிகள் இல்லாத தனியார் பள்ளிகள் – உயர்நீதிமன்ற உத்தரவு!
தமிழகத்தில் உள்ள நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் போதிய நிலம் இல்லாத 746 பள்ளிகள் மீதான நடவடிக்கையைத் தீர்மானிக்க தமிழக அரசு அமைத்த குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கூடுதல் கால அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், சமூக ஆர்வலர் பாடம் நாராயணன் என்பவர் பொதுநல மனு தாக்கல் ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது: ‘தமிழகத்தின் பல இடங்களில் தனியார் மெட்ரிக் பள்ளிகள் முறையான அனுமதியின்றி இயங்கி வருகின்றன. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தபோது மாணவர்கள் நலன் கருதி பள்ளிகளுக்கு தற்காலிக கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. உரிய விதிமுறைகளை பின்பற்றாததால் 746 தனியார் பள்ளிகளுக்கும் மீண்டும் அனுமதி வழங்கக்கூடாது என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, 746 பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு பள்ளிகள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பதை முடிவு செய்ய தமிழக அரசு குழுவுக்கு, வரும் அக்டோபர் 31ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்குவதாகக் கூறினார். மேலும், தமிழக பள்ளிக்கல்வித் துறை செயலாளர் அடுத்த விசாரணையின் போது நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி வழக்கை நவம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதில் தனியார் பள்ளிகளின் உள்கட்டமைப்பு மட்டுமின்றி, தனியார் பள்ளிகளில் இயக்கப்படும் பேருந்துகளின் நிலை குறித்தும் ஆராயப்பட வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக