லேபிள்கள்

28.10.16

ஜூலை 1–ந்தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு மந்திரிசபை கூட்டத்தில் முடிவு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜூலை 1–ந்தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும்.


அகவிலைப்படி உயர்வு

பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இதில், 7–வது மத்திய ஊதிய குழு சிபாரிசின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் 2 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த அகவிலைப்படி உயர்வின் மூலம் 50 லட்சத்து 68 ஆயிரம் மத்திய அரசு ஊழியர்களும், 54 லட்சத்து 24 ஆயிரம் ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவார்கள்.

ஜூலை 1–ந்தேதி முதல் அமல்

இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜூலை மாதம் 1–ந் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும்.

இதனால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.5 ஆயிரத்து 622 கோடியே 10 லட்சம் கூடுதல் செலவு ஆகும். கடந்த ஜூலை முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரையிலான 8 மாதங்களுக்கு ரூ.3 ஆயிரத்து 748 கோடியே 6 லட்சம் கூடுதல் செலவு ஆகும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

7–வது ஊதிய குழு சிபாரிசின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு (2015) செப்டம்பர் மாதம் 6 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. இந்த அகவிலைப்படி உயர்வு முன்தேதியிட்டு கடந்த ஆண்டு ஜூலை 1–ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இதனால் அகவிலைப்படி உயர்வு 119 சதவீதம் ஆனது.

அடிப்படை சம்பளத்துடன் இணைப்பு

அதன்பிறகு கடந்த மார்ச் மாதம் 6 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. அதாவது அகவிலைப்படி 119 சதவீதத்தில் இருந்து 125 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1–ந்தேதி முதல் முன்தேதியிட்டு அமலுக்கு வந்தது.

அத்துடன் இந்த 125 சதவீத அகவிலைப்படி அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்பட்டது.

காஷ்மீருக்கு ரூ.500 கோடி

நேற்று நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் மேலும் சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன.

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2014–ம் ஆண்டு பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு அடிப்படை கட்டுமான வசதிகளை மேம்படுத்த ரூ.8 ஆயிரம் கோடி வழங்கப்படும் என்று கடந்த நவம்பர் மாதம் பிரதமர் மோடி அறிவித்தார்.

அதன்படி காஷ்மீரில் மழை–வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆப்பிள் தோட்டங்களை சீரமைத்து மேம்படுத்தவும், புதிய தோட்டங்களை உருவாக்கவும் ரூ.500 கோடி ஒதுக்க மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக