அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, 'ஆதார்' அட்டை வழங்கும் பணி, நவ., 15ல் மீண்டும் துவங்குகிறது. இதுகுறித்து, அரசு கேபிள், 'டிவி' நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில், ஆதார் அட்டை பதிவு பணிகளை, அக்டோபர் முதல், மாநில அரசு ஏற்றுள்ளது. அதனால், செப்டம்பர் வரை, ஆதார் பதிவு பணிகளை மேற்கொண்ட, மத்திய அரசின், 'பெல்' நிறுவனம் விலகியது. இதனால், அரசுப் பள்ளிகளில் நடந்து வந்த மாணவ, மாணவியருக்கான, ஆதார் பதிவு பணிகள் நின்று போயின. அப்பணிகளை மீண்டும் தொடரும்படி, பள்ளிக் கல்வித் துறை வலியுறுத்தியது.
அதைத் தொடர்ந்து, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு, ஆதார் விபரம் பதிவு செய்யாத மற்றும் பணிகள் முழுமையாக நிறைவு பெறாத பள்ளிகளின் பட்டியல் பெறப்பட்டுள்ளது. தற்போது, பல சிக்கல்களுக்கு பின், பொது மக்களுக்கான ஆதார் பதிவு பணிகளை, முழு வீச்சில் துவங்கி விட்டோம். பள்ளிகளில், ஆதார் பணிகளை, நவ., 15ல் துவங்கவுள்ளோம்;
பொங்கல் பண்டிகைக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்; இப்பணியில், 500 பேர் ஈடுபடுவர். பொதுவாக, அரசு பள்ளிகளில் படிப்பவர்கள் தான், கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல சலுகைகளுக்காக, மனு செய்கின்றனர். அதனால் தான், அரசு பள்ளிகளுக்கு நேரடியாக சென்று, ஆதார் பதிவு செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக