மத்திய அரசின் டிஜிட்டல் சான்றிதழ் களஞ்சியத்தில், மாணவர்களின் சான்றிதழ் விபரங்களை பதிவு செய்யும்படி, தமிழக பல்கலைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலை சான்றிதழ்களில் போலி சான்றிதழ்கள் அதிகரித்துள்ளதாக, பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு புகார்கள் வந்தன.
இப்பிரச்னையை சமாளிக்க, டிஜிட்டல் சான்றிதழ் களஞ்சியத்தை, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதில், அனைத்து மாணவர்களும், கல்வி நிறுவனங்களும், தங்கள் சான்றிதழ் விபரம் மற்றும் நகல்களை பதிவு செய்யலாம்.அவை கல்வி நிறுவனங்களால் சரிபார்க்கப்படும். பணிக்கு வருவோரின் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை, தொழில் மற்றும் வேலைவாய்ப்பு நிறுவனங்கள், இணையதளத்தில் நேரடியாக அறியலாம்.
இத்திட்டத்தில் முதற்கட்டமாக, மும்பை பல்கலை, சோலாப்பூர், குருத்வாரா மற்றும் அம்பேத்கர் தொழில்நுட்ப பல்கலை, ஐதராபாத் ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலை ஆகியவை இணைந்துள்ளன.அதேபோல, தமிழகத்தில் அண்ணா பல்கலை, சென்னை பல்கலை. அண்ணாமலை பல்கலை உட்பட அனைத்து அரசு பல்கலைகளும், தங்கள் மாணவர்களின் சான்றிதழ் விபரங்களை டிஜிட்டல் களஞ்சியத்தில் இணைக்க, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக