லேபிள்கள்

7.7.17

அரசு தொடக்க பள்ளிகளில் ஆங்கிலம்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

''அரசு தொடக்கப் பள்ளிகளில், ஆங்கிலம் கற்பிப்பது குறித்து, ஆலோசனை நடந்து வருகிறது,'' என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

தி.மு.க., - கார்த்திகேயன்: வேலுார் தொகுதி, அல்லாபுரத்தில் உள்ள, ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியை, நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்த, அரசு முன்வருமா?

அமைச்சர் செங்கோட்டையன்: விதிமுறைகள் பூர்த்தியானால், அரசு பரிசீலனை செய்யும்.

கார்த்திகேயன்: வேலுார் மாநகராட்சி, 51வது வார்டில் உள்ள, அரசு உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். தொடக்கப் பள்ளிகள் சிலவற்றில், ஒன்றிரண்டு மாணவர்கள் உள்ளனர்; ஆசிரியர்கள், இருவர் உள்ளனர்.

அமைச்சர் செங்கோட்டையன்: ஒன்றிரண்டு இடங்களில், அது போன்ற நிலை உள்ளது. பெற்றோர், தங்கள் குழந்தைகள், ஆங்கில வழிக் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக, தனியார் பள்ளிகளை நாடிச் செல்கின்றனர். எனவே, அரசு தொடக்கப் பள்ளிகளில், ஆங்கிலம் கற்பிப்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.

அ.தி.மு.க., - ஆர்.நடராஜ்: சென் னை, நந்தனம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பின்பக்க சுவர், வெள்ளத்தில் சேதமடைந்தது. எனவே, அங்கு சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும்.

அமைச்சர் செங்கோட்டையன்: நடவடிக்கை எடுக்கப்படும்.

தி.மு.க., - பி.கே.சேகர்பாபு: அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரித்தாலும், சேர்க்கை விகிதம் குறைகிறது. அரசு பள்ளிகளில், கட்டடங்கள் சேதமடைந்து உள்ளன. அவற்றை, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் சரி செய்ய, அனுமதி அளிக்க வேண்டும்.

அமைச்சர் செங்கோட்டையன்: தனியார் பள்ளிகளுக்கு செல்வோர், அரசு பள்ளிகளை நாடி வரும் நிலை, விரைவில் ஏற்படும். இன்றைய, 'தினமலர்' நாளிதழில் கூட, 'அரசு பள்ளிகளுக்கு படையெடுக்கும் தனியார் பள்ளி மாணவர்கள்' என்ற தலைப்பில் செய்தி வெளியாகி உள்ளது.

பள்ளி கட்டடங்களை சரி செய்ய, நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியை, பள்ளி கட்டடங்களை பழுது பார்க்க ஒதுக்குவது குறித்து, முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும்.

தி.மு.க., - ராதாமணி: விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், 950 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், பொதுத் தேர்வு எழுத வேறு இடங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. அந்த பள்ளியில், தேர்வு மையம் அமைக்க வேண்டும்.

அமைச்சர் செங்கோட்டையன்: இந்த ஆண்டு, புதிதாக, 20 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. விக்கிரவாண்டியிலும் அமைக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக