லேபிள்கள்

22.8.17

விதிமீறல் இன்றி நல்லாசிரியர் விருது : தேர்வுக்குழுவிற்கு அதிகாரிகள் உத்தரவு

ஆசிரியர் தின நல்லாசிரியர் விருதுக்கு, முதற்கட்ட பட்டியலை, பள்ளிக்கல்வி இயக்குனரிடம் அதிகாரிகள் சமர்ப்பித்து உள்ளனர்.
விதி மீறல் இன்றி ஆசிரியர்களை தேர்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்., 5, ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பள்ளிகளில் கலை நிகழ்ச்சிகளும், பல போட்டிகளும் நடத்தப்படுகின்றன. மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில், சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு, நல்லாசிரியர் விருதும், இதையொட்டி வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு, மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாக விண்ணப்பம் பெற்று, சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்கின்றன. தமிழகத்தில் அமைச்சர்கள், ஆளுங்கட்சி ஆதரவு சங்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அதிகாரிகளால் சிபாரிசு செய்யப்படுவோருக்கே, மாநில அரசின் விருது வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. மேலும், ஜாதி, மத பின்னணியிலும், ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவதாக, புகார்கள் எழுந்துள்ளன.
இந்தாண்டு, நல்லாசிரியர் விருதுக்கு, ஆக., 5ல் விண்ணப்பங்கள் வழங்க, இயக்குனரகம் உத்தரவிட்டது. பல மாவட்டங்களில், முதன்மை கல்வி அதிகாரிகள், அனைவருக்கும் விண்ணப்பங்களை வழங்கவில்லை என்றும், அதனால், மாவட்ட கல்வி அதிகாரிகளே, ஆசிரியர்களின் பெயர்களை தேர்வு செய்ததாக, தகவல்கள் வெளியாகின. சில மாவட்டங்களில் விண்ணப்பிக்கவே, ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆக., 20ல், இதற்கான அவகாசம் முடிந்ததால், மாவட்ட கல்வி அதிகாரிகள், தங்கள் தேர்வு பட்டியலை, இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்பி உள்ளனர். அந்த பட்டியல், சரியான பட்டியலா, தகுதி பெற்ற யாராவது விடுபட்டுள்ளனரா; விண்ணப்பிக்க வாய்ப்பு கிடைக்காதோருக்கு, மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா என, ஆசிரியர் சங்கத்தினர் சந்தேகங்களை எழுப்பி உள்ளனர்.

இது குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் கூறுகையில், 'யாராவது விடுபட்டிருந்தால், அவர்கள், நேரடியாக பள்ளிக்கல்வி தலைமை அலுவலகத்தை அணுகலாம். 'விதி மீறலுக்கும், சிபாரிசுக்கும் இடமின்றி, தகுதியானவர்களுக்கு மட்டுமே, நல்லாசிரியர் விருது வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது' என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக