பி.எட்., படிப்பு நடத்தும் கல்வியியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை அனுமதி வழங்குவதில் முறைகேடு நடக்காமல் தடுக்க, 'ஆன்லைன்' முறையை, தமிழ்நாடு கல்வியியல் பல்கலை
அறிமுகம் செய்துள்ளது. மாநிலம் முழுவதும், 21 அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லுாரிகள் உட்பட, 720 கல்லுாரிகளில், பி.எட்., படிப்பு நடத்தப்படுகிறது. ஓராண்டாக இருந்த படிப்பு காலம், மத்திய அரசின் உத்தரவுப்படி, 2016 முதல், இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டு உள்ளது. இந்த கல்லுாரிகளில், ஆண்டுதோறும், முதலாம் ஆண்டில், 50 ஆயிரம் - 75 ஆயிரம் வரை, புதிய மாணவர்கள் சேர்க்கப்படுவர். விதிமுறைப்படி சேர்க்கை நடந்ததை உறுதி செய்யும் வகையில், மாணவர்களின், 'ஆதார்' எண், புகைப்படம், அவர்கள் கையெழுத்திட்ட ஆவணங்கள் போன்ற சேர்க்கை ஆவணங்களை, கல்லுாரிகள், பல்கலைகளில் சமர்ப்பிக்க வேண்டும். அவற்றை, பல்கலை அதிகாரிகள் ஆய்வு செய்து, சேர்க்கைக்கு உரிய அனுமதி வழங்குவர். இதில், பல ஆண்டுகளாக முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் உள்ளன. கல்லுாரி நிர்வாகி களை பல்கலைக்கு வரவழைத்து, அவர்களிடம், அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பெயரில், சிலர் வசூல் வேட்டை நடத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக, கல்லுாரி அதிபர்கள், பல்கலை வளாகத்தில், நள்ளிரவில் போராட்டம் நடத்திய சம்பவங்களும் அரங்கேறின.இந்த பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்தாண்டு முதல், ஆன்லைன் முறையை, பல்கலை துணைவேந்தர் தங்கசாமி அறிமுகம் செய்துள்ளார். செப்., 8 வரை, ஆன்லைனில் பதிவு செய்ய, கல்லுாரிகளுக்கு அவகாசம் தரப்பட்டுள்ளது.இதன் மூலம், மாணவர் சேர்க்கை அனுமதிக்காக, கல்லுாரி நிர்வாகத்தினர் யாருக்கும் லஞ்சம் தர தேவையில்லை. சென்னையில் உள்ள பல்கலை வளாகத்துக்கு, கல்லுாரி அதிபர்கள் வர வேண்டாம்; விண்ணப்பிக்க விரும்புவோர், ஆன்லைனில் விபரங்களை பூர்த்தி செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.பல்கலைக்கு செலுத்த வேண்டிய கட்டணத்திற்கு, வங்கி வரைவோலையான, 'டிடி' எடுத்து, ஆன்லைனில் பதிவேற்றிய விபரங்களை நகல் எடுத்து, பல்கலைக்கு தபாலில் அனுப்ப வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.
பின், ஆன்லைனில் மாணவர் சேர்க்கைக்கான தகுதி சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தால், கல்லுாரி அதிபர்கள் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக