''தமிழ் வழியில் படித்து, பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற, சிறந்த மாணவர்கள், 960 பேருக்கு, இந்த ஆண்டு முதல், 'காமராஜர் விருது' மற்றும் பரிசுத் தொகை வழங்கப்படும்,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில், தமிழ் வழிக் கல்வியில் படித்து, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், 15 பேர்; பிளஸ் 2 மாணவர்கள், 15 பேர் என, மாவட்டத்திற்கு, 30 பேர் வீதம், 32 மாவட்டங்களுக்கு, 960 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு, காமராஜர் பிறந்த நாளில், 'காமராஜர் விருது' வழங்கப்படும். அத்துடன், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஊக்கத்தொகையாக, 10 ஆயிரம் ரூபாய்; பிளஸ் 2 மாணவர்களுக்கு, 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதற்காக, 1.45 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள், நுாறு பேரை, வெளிநாட்டிற்கு அழைத்து செல்ல, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, மூன்று கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அறிவியல், தொழில்நுட்பம், கலை, இலக்கியம் என, நான்கு பிரிவாக மாணவர்கள், ஜப்பான், சீனா, தென் கொரியா, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு, அழைத்து செல்லப்படுவர்.
பொதுத்தேர்வு மதிப்பெண், கலை இலக்கியப் போட்டி, அறிவியல் போட்டி, நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, சாரணர் இயக்கம் போன்றவற்றில், அவர்களின் செயல்பாடு அடிப்படையில், தேர்வு செய்யப்படுவர். மாணவர்கள், பத்தாம் வகுப்பு முடித்த பின், பிளஸ் 1 வகுப்பில் சேர, என்ன பாடம் தேர்வு செய்யலாம் என, தடுமாறுகின்றனர். அவர்கள், புதிதாக, 286 பாடங்களை படிக்கலாம். அதேபோல், பிளஸ் 2 முடித்து, கல்லுாரி செல்லும் மாணவர்களும் தடுமாறுகின்றனர். அவர்களுக்கு உதவ, மேல் படிப்பு பற்றிய தகவல் பலகை, அனைத்து பள்ளிகளிலும், ஜன., 4க்குள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக