புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு ஜுன் 3-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக மார்ச் 7-ஆம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்தக் கல்லூரியில் உள்ள 200 எம்பிபிஎஸ் இடங்கள் ஆண்டுதோறும் நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்படும். அதன்படி, 2018-ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு ஜுன் 3-ஆம் தேதி நடைபெற உள்ளது. நுழைவுத் தேர்வுக்கு மார்ச் 7-ஆம் தேதி முதல் இணையம் (ஆன்-லைன்) மூலம் விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். நுழைவுத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டை (ஹால் டிக்கெட்) தேர்வு நடைபெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். உரிய பரிசோதனைகளுக்குப் பிறகே மாணவர்கள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள். ஆள் மாறாட்டத்தைத் தடுப்பதற்கு பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு மற்றும் நிழற்படம் எடுக்கும் பணிக்கு ஏற்பாடு செய்யப்படும். தேர்வு முடிவுகள் உடனடியாக வெளியிடப்படும். மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜுன் 27 முதல் 29-ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 25-ஆம் தேதியும் நடைபெறும். மூன்றாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 20-ஆம் தேதியும், இறுதிக் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 28-ஆம் தேதியும் நடைபெறும். செப்டம்பர் 30-ஆம் தேதி மாணவர் சேர்க்கைக்கான இறுதி நாள் என ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டு 200 எம்பிபிஎஸ் இடங்களுக்கு ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 663 மாணவர்கள் விண்ணப்பித்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக