தமிழகத்தில் மார்ச் மாதம் தொடங்கவுள்ள பொதுத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கும், தேர்வுப் பணிகளில் ஈடுபடும் கண்காணிப்பாளர்களுக்கும் தேர்வுத் துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2, மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. பிளஸ் 2 வகுப்புக்கு மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி வரையிலும், பிளஸ் 1 வகுப்புக்கு மார்ச் 7-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 16-ஆம் தேதி வரையிலும், பத்தாம் வகுப்புக்கு மார்ச் 16-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20-ஆம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெறவுள்ளன.
இதைத் தொடர்ந்து தேர்வெழுதும் மாணவர்கள், கண்காணிப்பாளர்களுக்கு சில கட்டுப்பாடுகளை தேர்வுத் துறை விதித்துள்ளது. அதன் விவரம்:
தேர்வுப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் தேர்வு தொடங்குவதற்கு முன்பாக அன்றைய தேர்வுக்குரிய முதன்மை விடைத்தாளில் பக்க எண்ணிக்கையை மாணவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்படும் விடைத் தாளின் முகப்பு பக்கத்தில் புகைப்படம், பெயர் ஆகியவை தங்களுடையதுதானா என்றும், தேர்வு எழுத உள்ள பாடம், பயிற்று மொழி ஆகிய விவரங்களை சரிபார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்த வேண்டும். தேர்வுக் கூடத்துக்கு துண்டுச் சீட்டுகள் எடுத்து வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மாணவர்களுக்கு: மாணவர்கள் தேர்வு எழுதும் போது விடைத்தாளின் எந்தப் பகுதியிலும் தமது தேர்வு எண்ணையோ அல்லது பெயரையோ கண்டிப்பாக எழுதக் கூடாது. கூடுதல் விடைத்தாள் வேண்டுமெனில் கடைசி 2 பக்கங்களில் எழுதுவதற்கு முன்னதாக கூடுதல் விடைத் தாளின் தேவையை அறைக் கண்காணிப்பாளரிடம் தெரிவிக்க வேண்டும்.
மாணவர்கள் அந்தந்த பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகள் தவிர "ஓவர் சாய்சில்' எழுதிய விடைகளைக் கோடிட்டு அடித்தால், அந்த விடை தன்னால் எழுதப்பட்டது என்று குறிப்பு எழுத வேண்டும். அதில் அறைக் காணிப்பாளர் கையொப்பம் இடக்கூடாது. மேலும் மாணவர்கள் வராத இடத்தில் வேறு மாணவர்கள் அமர்ந்து தேர்வு எழுதக் கூடாது.
தேர்வு அறைக்குள் நுழையும் முன்பே தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை சரிபார்த்து காலணி, பெல்ட் ஆகியவற்றை வெளியில் விட்டுவிட்டு இருக்கையில் சென்று அமர வேண்டும். தேர்வு அறைக்குள் செல்லிடப்பேசி எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. மாணவர்கள் தாங்கள் எழுதிய அனைத்து விடைகளையோ அல்லது சில விடைகளையோ தாமே அடித்து விட்டால் அது ஒழுங்கீனச் செயலாக கருதப்படும். விடைத் தாளில் விடைகள் எழுதி முடித்த பிறகும் மீதம் உள்ள வெற்றுப் பக்கங்களில் குறுக்கே கோடிட வேண்டும் ஆகிய கட்டுப்பாடுகள் தேர்வுத் துறையால் விதிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக