லேபிள்கள்

28.3.18

பிளஸ் 1 மாணவர்களை கதற வைத்தது பொருளியல் : * இளைப்பாறுதல் தந்தது இயற்பியல்

பிளஸ் 1 தேர்வில், பொருளியல் பாட வினாத்தாள் மிக கடினமாக இருந்ததால், மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அதேநேரத்தில், இயற்பியல் வினாத்தாள் எளிதாக இருந்ததால், மாணவர்களுக்கு
இளைப்பாறுதலாக இருந்தது. பிளஸ் 1க்கு, முதலாவது ஆண்டாக பொதுத்தேர்வு நடப்பதால், வினாத்தாள் எளிதாக இருக்கும் என, மாணவர்களும், ஆசிரியர்களும் கருதினர். 
எதிர்பார்ப்பு : ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக, வினாத்தாள் கடினமாக தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால், ஒவ்வொரு தேர்விலும், மாணவர்கள் அச்சத்துடன், தேர்வறைக்கு செல்லும் நிலை உள்ளது. இதுவரை, மொழிப்பாடம், ஆங்கிலம், கணிதம், விலங்கியல், நுண் உயிரியல் ஆகிய தேர்வுகளில், வினாத்தாள் கடினமாக இருந்தது. மீதமுள்ள பாடங்களிலாவது, வினாத்தாள் எளிமையாக இருக்குமா என்ற, எதிர்பார்ப்பில் மாணவர்கள் இருந்தனர்.இந்நிலையில், அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, நேற்று இயற்பியல் தேர்வு நடந்தது. அதில், மொத்தமுள்ள நான்கு பிரிவுகளிலும், கேள்விகள் எளிமைஆகவே இருந்தன. வகுப்புகளில் மாணவர்கள் பயிற்சி எடுத்த கேள்விகள், பாடத்தின் பின்பக்க கேள்விகளே வினாத்தாளில், அதிகம் இடம் பெற்றன. அதேநேரத்தில், ஒரு மதிப்பெண் கேள்விகளில், மூன்று முதல் ஐந்து கேள்விகள், மாணவர்களின் சிந்தனை திறனை சோதிப்பதாக இருந்தன. மற்ற, 15 கேள்விகளும், கொஞ்சம் சிக்கலாக இருந்தாலும், மாணவர்களால் சமாளிக்க முடிந்தது.
பொருளியலுக்கு சிக்கல் : ஆனால், பொருளியல் பாட மாணவர்கள், கடும் சோதனைக்கு ஆளாகினர். அவர்களுக்கான வினாத்தாளில், பெரும்பாலும் புதிய கேள்விகள் இடம் பெற்றன. பல கேள்விகள், பாடங்களின் உள்பகுதியில் இருந்து எடுக்கப்பட்டிருந்தன. மொத்தம், 90 மதிப்பெண்களுக்கு, 50 மதிப்பெண்கள் கிடைப்பதே, பெரிய விஷயம் என, மாணவ - மாணவியர் கூறினர். முதல் பிரிவில், 7, 8 மற்றும், 9ம் எண் கேள்விகளை, புரிந்து கொள்ள, மாணவர்கள் சிரமப்பட்டுள்ளனர். இரண்டு, மூன்று மற்றும் நான்காம் பிரிவுகளில், தலா, ஏழு கேள்விகளுக்கு மாணவர்கள் விடை எழுத வேண்டும். ஆனால், பெரும்பாலான மாணவர்களால், மூன்று கேள்விகளுக்கே விடை எழுத முடிந்தது. ஒவ்வொரு பிரிவிலும் நான்கு கேள்விகள், சிக்கலான கேள்விகளாக இருந்ததாக, மாணவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
புதிய கேள்விகள் : வினாத்தாள் குறித்து, சென்னை குஜராத்தி, ஏ.பி.பரேக் மேல்நிலைப்பள்ளி, பொருளியல் ஆசிரியர், ஏ.பி.பழனி கூறியதாவது: பொருளியல் பாடத்தில், மாணவர்கள் தேர்ச்சி பெறுவதில் பிரச்னை இருக்காது. ஆனால், முழு மதிப்பெண் பெற, கடினமாக பயிற்சி எடுத்திருக்க வேண்டும். அந்த அடிப்படையில் தான் வினாத்தாள் இருந்தது. பல புதிய கேள்விகள் இருந்தன. பாடங்களை முழுமையாக புரிந்து படித்த மாணவர்கள், அதிக மதிப்பெண் பெறுவர்.இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக